வெல்லவாய எல்லேவல நீர் வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற கல்முனைப்பிரதேசத்தைச்சேர்ந்த 04 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்  இவர்கள் பரிதாபமான முறையில்  உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகலளவில் இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.
கல்முனையிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் (பீகாஸ்)கல்வி பயிலும் 10 பேர் கொண்ட மாணவர்கள் குழுவொன்று இன்று காலை கல்முனையிலிருந்து  வெல்லவாய எல்லேவல நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்காக சுற்றுலாச்சென்றுள்ளனர். 

இவர்களில் நால்வர் நீரில் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் மூழ்கி காணாமல் போய்  உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

21 வயதுக்கும் 23 வயதுக்குமிடைப்பட்ட இளைஞர்கள் நால்வரே இச்சம்பவத்தில் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களில் இருவர் கல்முனையை சேர்ந்தவர்கள் 
கல்முனைக்குடி பள்ளி வீதியைச்சேர்ந்த முஹம்மட் சுஹிரி லாபிர் மற்றும் ஹனீபா வீதியைச்சேர்ந்த அபூபக்கர் ஹனாப் ஆகியோர் 
என்பதுடன்  சாய்ந்தமருது 16 ஆம் பிரிவைச்சேர்ந்த முகம்மட் முக்தார் முகம்மட் நெளபீஸ் மற்றும் சம்மாந்துறையைச்சேர்ந்த அஹ்மட் லெப்பை   அப்சால் ஆகிய நான்கு இளைஞர்களுமே இச்சம்பவத்தில் காணாமல் போயுள்ளனர்.

இவர்களைத்தேடும் பணியில் வெல்லவாய பொலிஸார் மற்றும் இப்பிரதேச பொது மக்கள் மற்றும் சுழியோடிகளும் இணைந்து ஈடுபட்டுள்ளதாகவும் இவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். இதே வேளை இது வரை சம்மாந்துறையைச்சேர்ந்த இளைஞனின் சடலம் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இப்பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை சடலங்களை தேடுவதில் பாரிய இடைஞலாக அமைந்துள்ளதாகவும் மாலை 5 மணியுடன் தேடுதல் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.இது பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
இதே வேளை இப்பரிதாபகரமான உயிரிழப்புச்சம்பவம் கல்முனை சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறை  ஆகிய பிரதேசங்ளில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.