X-ray திரைகளை கழுவத் தேவையான 2 இரசாயனங்களுக்கும் பற்றாக்குறை

சாதாரண ரேடியோகிராபி இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் எக்ஸ்ரே பரிசோதனை தொடர்பான விழித்திரைகளை கழுவுவதற்கு தேவையான இரசாயனங்கள் இரண்டும் பற்றாக்குறையாக இருப்பதாகவும், தற்போதைய சூழ்நிலையில் பல மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அரச கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த பரிசோதனைகளுக்காக தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மொத்த இரசாயன தொகையானது அடுத்த மாதத்துடன் முடிவடைவதாகவும், இதன் காரணமாக பாரிய தொகை நஷ்டம் ஏற்படும் நிலை காணப்படுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

டிஜிட்டல் இயந்திரங்கள் மூலமும் சாதாரண இயந்திரங்கள் மூலமும் எக்ஸ்ரே பரிசோதனைப் பணிகள் நடைபெறுவதாகவும், பெரும்பாலான அடிப்படை வைத்தியசாலைகளில் சாதாரண இயந்திரங்களே உள்ளதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இம்மாதம் 9ஆம் திகதியிலிருந்து பிரதான டிஜிட்டல் இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாகவும் சங்கம் குறிப்பிடுகிறது.

இந்த இயந்திரம் தொடர்பான சேவை ஒப்பந்தங்கள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் கைச்சாத்திடப்படாததால், இது வரையில் இயந்திரத்தை சீர்செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக விபத்துக்குள்ளான நோயாளிகளின் எக்ஸ்ரே பரிசோதனைகள் மேலதிக இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும், மேலதிக இயந்திரம் மூலம் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.