காத்தான்குடியில் ஒரு குடும்பத்தின் 150 வருட பின்னணியுள்ள வரலாற்று நூல் ஆவணமாகிறது - எம் ஜே எம் சுக்ரி
விரைவில் வெளியாகிறது............
"History is not was,it is" என வில்லியம் போ(F)க்னர் எனும் அமெரிக்காவின் எழுத்தாளர் சொல்லுவார்.
ஒரு குடும்பத்தின் வரலாற்றுக்கதைக்குள், காத்தான்குடி எனும் அழகிய நகர் இப்படியொரு வரலாற்றாளர்களையும்,வரலாற்றையும் கொண்டிருக்கிறதா? என சிலாகித்து பேச வைக்கும் ஒரு நூலாக வெளிவரவுள்ளது
"ஆலமரத்தின் விழுதுகள்" எனும் நூல் .
150 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றை கொண்ட ஆறு தலைமுறையினரான தனது உறவுகளை நினைவுபடுத்தியும்,அடுத்த பரம்பரைக்கு இதனை கையளிக்கும் முகமாகவும் விரைவில் இந்நூல் வெளிவரவுள்ளதோடு, நாமறிய வேண்டிய முக்கிய வரலாறுகளையும் திரும்பிப்பார்க்க வைக்கும் என்பதில் துளியளவும் ஐயமிருக்காது என்பது திண்ணமான நம்பிக்கை.
இந்த நூல், குடும்ப வரலாற்றை சொல்கின்ற, இம்மண்ணில் வெளியிடப்படுகிற, முன்னுதாரணமான செயற்பாடு என்பதில் இம்மண்ணை நேசிப்போர் நிச்சயம் பெருமிதமடைவர்.
காத்தான்குடி எனும் மண் கொண்டிருக்கும் சிறப்பம்சம் மிக்க பல வரலாறுகளில் இந்த நூல் நாமறிந்திருக்க வேண்டிய வரலாற்று தகவல்களை நமக்கு தரப்போகிறது.
பலரும் நாளாந்தம் வருகை தந்து பார்வையிடும் காத்தான்குடி பூர்வீக நூதனசாலை அமைந்துள்ள இடத்தில் 1945ஆம் ஆண்டு மெத்தை வீடு அமைக்கப்பட்டு அங்கு ஊரினுடைய நிறைய பஞ்சாயத்துக்கள் நடைபெற்றிருக்கின்றன.
காத்தான்குடி பிரதான வீதியில் (மீரா பாலிகா தேசிய பாடசாலை முன்பாக) அமைந்திருக்கும் Fashion Tailors நிறுவனத்தின் உரிமையாளரும், பிரதம நூலாசிரியருமான Mohammed Nawas அவர்கள், தனது குடும்பத்தாரின் பங்களிப்புடன் வெளியிடும் இந்நூலில் பல முக்கிய வரலாறுகளை கூறுகிறார்.
குடும்பத்தின் ஆணி வேரான மர்ஹூமா மதீனா உம்மாவின் மூத்த சகோதரர் மர்ஹூம் ஆதம் பாவா ஹாஜியார்.அவரை "பொம்பு மரைக்கார்" எனும் பதவிப்பெயர் கொண்டு சிறப்பித்து அழைப்பார்கள்.அவரே இந்த மெத்தை வீட்டில் பஞ்சாயத்துக்களை நடாத்தி வந்திருக்கிறார்.
காத்தான்குடி பிரதான வீதியில் Jusla Pharmacy க்கு முன்னாலுள்ள ஒழுங்கைக்கும் இவரை நினைவு படுத்தி ABH Lane என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஊர், பட்டின சபையாக இருந்த காலத்தில்,1968ஆம் ஆண்டு பட்டின சபை தேர்தலில் வெற்றியீட்டி ஊரின் பிரதி தவிசாளராக இருந்தவர் மர்ஹும் ஆதம் பாவா ஹாஜியாரின் (பொம்பு மரைக்காரின்) மகன் மர்ஹும் ஆதம் பாவா முஹம்மட் இஸ்மாயீல். "2ஆவது பொம்பு மரைக்கார்"என பதவிப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்.
இவர் காத்தான்குடியில் மோட்டார் சைக்கிளை முதன் முதலாக கொண்டு வந்தவர் மட்டுமின்றி பிரிட்டிஷ் கார் ஒன்றையும் முதன் முதலாக கொண்டு வந்தவர் என நூலாசிரியர் குறிப்பிட்டார்.
இந்த வரலாற்று பதிவுகள் உட்பட இன்னும் பல விடயங்களை விரிவாக குறிப்பிட்டு தகவல்களை சரியாக ஆவணப்படுத்தி மிக விரைவில் "ஆல மரத்தின் விழுதுகள்" எனும் நூலை உத்தியோகபூர்வமாக வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் முஹம்மட் நவாஸ் உட்பட அவரது குடும்பத்தினர் குறிப்பிடுகின்றனர்.
காத்த மண்ணில் இவ்வாறான நூல் வெளியீட்டுக்கு உங்கள் ஆதரவை வழங்குவதோடு இந்த விடயத்தினை பகிர்ந்து காத்தான்குடி மண் பற்றி நம்மில் பலரும் அறியாத அல்லது ஓரிருவர் அரிதாக தெரிந்து வைத்திருக்கிற கீர்த்தி மிக்க வரலாற்று சுவடுகளை எல்லோரும் அறிந்திடச்செய்வோம்
நூலாசிரியருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்கள்.
(கீழே முக்கியத்துவம் வாய்ந்த சில புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது)
எம்.ஜே.எம்.ஷுக்ரி
கருத்துகள்
கருத்துரையிடுக