அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஆர்ட்டெமிஸ்-2 விண்கலத்தை மனிதர்களுடன் நிலவுக்கு ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் 3 பேரும் ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வந்துள்ளனர்.

வாஷிங்டன்: நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா திட்டமிட்டிருக்கிறது.

கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் நிலவில் தரையிறங்கியது. விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் மனிதராக நிலவில் கால் பதித்தார்.

வருகிற 2024-ம் ஆண்டுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக ஓரியன் விண்கலத்தை நாசா உருவாக்கியது.

இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் ஆர்ட்டெ மிங்-1 ஓரியன் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. ஆளில்லாமல் அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம், நிலவுக்கு 130 கி.மீ. தொலைவில் இருந்து துல்லியமாக படமெடுத்து அனுப்பியுள்ளது. அதன்பின் அந்த விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது.

இதையடுத்து ஆர்ட்டெ மிஸ்-2 திட்டத்தை நாசா விஞ்ஞானிகள் தொடங்கினார்கள். இதில் நிலவுக்கு விண்கலத்தில் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஆர்ட்டெமிஸ்-2 விண்கலத்தை மனிதர்களுடன் நிலவுக்கு ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஆர்ட்டெமிஸ்-2 திட்டத்தில் நிலவுக்கு அனுப்ப நான்கு விண்வெளி வீரர்களை நாசா தேர்வு செய்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், பெண் வீராங்கனையான கிறிஸ்டினா கோச், கனடாவைச் சேர்ந்த ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவின் 3 பேரும் ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வந்துள்ளனர். ஜெர்மி ஹேன்சன் தனது முதல் விண்வெளி பயணத்தை மேற்கொள்கிறார். இவர்கள் 4 பேரும், நீல நிற விண்வெளி உடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

கிறிஸ்டினா கோச், நிலவு பயணத்துக்கு அனுப்பப்படும் முதல் பெண் என்ற சிறப்பை பெறுகிறார். அவர் எலக்ட்ரிகல் என்ஜினீயர் ஆவார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபோது விண்வெளி நடைபயணத்தில் பங்கேற்ற முதல் முழு பெண் என்ற பெருமையை பெற்றார்.

ஆர்ட்டெமிஸ்-2 விண்கலம் நிலவை வட்டமிடும். ஆனால் அதன் மீது தரையிறங்காது.