78 வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சோதனை!


வவுனியாவில் 78 வர்த்தக நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 4 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட நிறுவை, அளவைப் பிரிவின் உதவி அத்தியட்சகர் எஸ். இராஜேஸ்வரன் இன்று (11) தெரிவித்துள்ளார்.

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எமது அமைச்சின் உத்தரவுக்கமைய வவுனியா வர்த்தக நிலையங்களில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 4 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா இலுப்பையடி, சந்தை உள்வட்ட வீதி, கண்டி வீதி, பழைய பேரூந்து நிலையம், நெளுக்குளம், பசார் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 78 வர்த்தக நிலையங்கள் மீது இந்த திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது நிறுத்தல் தராசுகள் முத்திரையிடப்பட்டுள்ளதா, நிறுத்தல் அளவைகள் சரியாக உள்ளனவா, பொதி செய்யப்பட்ட பொருட்களின் நிறுத்தல் அளவைகள் சரியானவையா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதனை முறையாக செய்யாத 4 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

-வவுனியா தீபன்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.