முன்னாள் அமைச்சர் ரெஜி ரணதுங்கவின் 86வது பிறந்தநாள் விழா உடுகம்பொலவில்...

முன்னாள் அமைச்சரும், முன்னாள் ஆளுநரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியுமான மறைந்த ரெஜி ரணதுங்கவின் 86ஆவது பிறந்தநாள் விழா ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தலைமையில் இம்மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு உடுகம்பொலவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. 

அங்கு, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் பல கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திரு. ரெஜி ரணதுங்க 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதி உடுகம்பலையில் பிறந்தார் மற்றும் மினுவாங்கொடை நாலந்தா கல்லூரி, நீர்கொழும்பு ஹரிச்சந்திரா கல்லூரி மற்றும் கோட்டே ஆனந்தா கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். அவர் ருமேனிய குடியரசு பல்கலைக்கழகத்தில் அரசறிவியலில் பட்டம் பெற்றார்.

1962ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான ரெஜி ரணதுங்க, 1989ஆம் ஆண்டு முதன் முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். 1994 தேர்தலின் பின்னர், போக்குவரத்து, சுற்றாடல் மற்றும் சிவில் விவகாரங்கள் பிரதி அமைச்சராக பதவியேற்ற ரெஜி ரணதுங்க, துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பிரதி அமைச்சராகவும், சிவில் விமான சேவை, உணவு மற்றும் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி அமைச்சுப் பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். ரணதுங்க தேசிய கைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

ரெஜி ரணதுங்க, நந்தனி ரணதுங்கவை மணந்து ஆறு பிள்ளைகளின் தந்தையாவார். தற்போதைய ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க, முன்னாள் அமைச்சரும் முன்னாள் கிரிக்கட் அணித்தலைவருமான அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோரின் பிரியமான தந்தையும் ஆவார்.

முனீரா அபூபக்கர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.