பிற்போடப்படும் தேர்தல்;அரச சதியா?பொருளாதார நெருக்கடியா?
 
 
இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்போது ஓரளவு மேலெழுந்து வருகின்ற வேளை தேர்தலை நடாத்தியாக வேண்டும் என்ற முனைப்பில் அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். உண்மையிலேயே தேர்தல் பொது மக்களுக்கு தேவைதானா என்று கேட்டால் அங்கு முழுமையான பதிலை எதிர்பார்க்க முடியாது. இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்ற பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளது.
 
 
இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி கடந்த ஜனவரி மாதம் ஆரம்பமாகின. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு இருக்க வேண்டும் ஆனால் அவற்றின் பதவிக்காலம் மேலதிக ஒரு வருடமாக அதிகரிக்கப்பட்டது. இலங்கையில் 341 உள்ளூராட்சி சபைகள் மொத்தமாக உள்ளன. அவற்றில் 340 சபைகளுக்கான தேர்தல்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்றது. எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுவொன்று நிராகரிக்கப்பட்டமைக்கு உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டதனால், எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் தனியாக கடந்த 2019 ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்டது.உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் நான்கு வருடங்களாகும். அதனால் 2022 பெப்ரவரி மாதத்துடன் எல்பிடிய பிரதேச சபை தவிர்ந்த அனைத்து சபைகளின் பதவிக்காலமும் நிறைவுக்கு வந்தன. எனினும் உள்ளூராட்சி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினால் அந்த சபைகளின் பதவிக்காலம் ஒரு வருடத்தினால் அதிகரிக்கப்பட்டது. எனவே இந்த ஆண்டு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளது.
 
தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் தேர்தலை அரசாங்கம் ஒத்திவைக்கவே முயற்சிக்கின்றதாக அரச கட்சிகள் உட்பட அரசியல் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது. என்றாலும் தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்ற கேள்வியை பொதுமக்களிடம் நாம் வினவியபோது,  அவற்றில் பெரும்பாலானோர் தேர்தல் நடக்காமல் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்தனர். உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதை ரத்துச் செய்யுமாறு கோரி கடந்த காலங்களில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதாவது நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் தேர்தலை நடத்தினால் பாரிய விளைவை சந்திக்க வரும் என்று ஓய்வு பெற்ற கேர்ணல் ஒருவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
 
 
நாட்டில் தற்போதுள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை அதிகம் என்பதால் அதனை அரைவாசியாக குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 8,690 உள்ளூராட்சி உறுப்பினர்கள் தற்போது உள்ளனர். இந்த உறுப்பினர் தொகையை குறைக்கும் பொருட்டு தற்போது உள்ளூராட்சி சபைகளுக்கான வட்டாரங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதற்காக "எல்லை நிர்ணய ஆணைக்குழு" ஒன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சிகள் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அவர் திட்டம் போடுவதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. தற்போதைய நடைமுறையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முறைமையானது 2017 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் உருவாக்கப்பட்டது. இதனாலே உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000க்கு அதிகமானது. எனினும் புதிய தேர்தல் முறைமையில் விகிதாசார ரீதியிலும், வட்டார ரீதியிலும் உறுப்பினர்களை தெரிவு செய்யும் கலப்பு முறை அறிமுகமானது. முன்னர் விகிதாசார தேர்தல் முறையே அமுலில் காணப்பட்டது. பிரதமராக இருக்கும் போது உள்ளூராட்சி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை அதிகரிக்க செய்த ரணில் விக்ரமசிங்க, அவர் ஜனாதிபதியாக இருக்கும் போது குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளமையானது அரசியல் மட்டத்தில் பல்வேறு விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
 
முதலாவது உள்ளூராட்சி சபைத் தேர்தல் 1990 ஆம் ஆண்டு  சபை நடத்தப்பட்டது.
(1991- 1995 )1996 தேர்தல் நடக்கவில்லை.
 
(1997- 2001) 2002 தேர்தல் நடக்கவில்லை. ஒரு வருடத்தால் கூட்டப்பட்டது.
 
(2002- 2006) அந்த வருடத்தில் மாத்திரம் தான் உரிய காலத்தில் தேர்தல் நடைபெற்றுள்ளது.
 
(2006- 2010 )  ஒரு வருடம் மேலதிகமாக கூட்டப்பட்டது.
 
2011 -2015 நடக்க வேண்டிய தேர்தல் நடக்காது 2018 ஆம் நடந்தது.
 
(2018- 2022 ) மேலதிகமாக ஒரு வருடம் கூட்டப்பட்டது.
 
நடைபெற்ற அனைத்து தேர்தல்களும் பிற்போடப்பட்டது சட்டத்தின் அதிகாரத்துக்கு அமையவே. 2015 இல் நடக்க வேண்டிய உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 நடந்தமைக்கான காரணம் புதிய தேர்தல் சட்டமன்றைக் கொண்டு வந்து அதனை அமுல்படுத்தவே இந்த காலம் செலவழிக்கப்பட்டது. அதாவது இது சட்டவரையறையின் கீழ் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
சட்டப்படி உள்ளூராட்சி தேர்தல் நடக்க வேண்டும் என்றாலும் தேர்தல் நடக்காதூ
இருப்பதற்கான பல உபாயங்களை புள்ளி விபரரீதியில் அரசு மற்றும் அரச பங்காளிகள் திட்டமிட்டு உள்ளார்கள் என சுதந்திரமானதும்,நீதியானதுமான தேர்தலுக்கான  மக்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.அதாவது, ஒரு தேர்தலை பிற்போடுவதற்கு முப்பது தடவைக்கும் மேற்பட்ட திட்டம் போட்டது இந்த உள்ளூராட்சித் தேர்தலாகும்.மேலும், அரசாங்கத்துக்கு தேர்தலை முகம் கொடுக்க இருக்கின்ற பயமும், அச்சமும் தான் தேர்தல் பிற்போட்டமைக்கான காரணம் என்றார்.இங்கு குறிப்பாக, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.அதில் 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரச உத்தியோகத்தர்களாக இருக்கின்றனர்.அவர்களுக்கு இங்கு ஒரு சிக்கல் உள்ளது. அதாவது, வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் நடைபெற்று முடிவு செல்லும் வரை அவர்களுக்கு உத்தியோகத்துக்கு செல்ல முடியாது.அதுவே தேர்தல் சட்டம்.எனவே தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்படுமாயின் அரச உத்தியோகத்தர்களுக்கு வருடக் கணக்கு உத்தியோகத்துக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும் என்று மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.
 
 
 
உள்ளூராட்சி நிறுவனங்களாக பிரதேச சபைகள் நகர சபைகள் மாநகர சபைகள் உள்ளடங்கும். நாட்டின் பிரதான சட்டமான அரசியலமைப்பின் மூலமே உள்ளூராட்சிக்கான அதிகாரம் கிடைக்கின்றது. அதாவது அரசியல் அமைப்பிற்கான 13வது திருத்தத்தின் ஒன்பதாவது அட்டவணையில் 4.1, 4.2,4.3 ஆகிய உறுப்புரைகள் மூலமாகும். மேற்படி அதிகாரங்கள் உள்ளூராட்சி அமைச்சருக்கும், மாகாண சபையின் அதனையொத்த அமைச்சருக்கும், உள்ளூராட்சி அமைச்சர், மாகாண சபையும் ஒன்று சேர்ந்து மாகாண சபையின் மாதிரி, பொறுப்புக்கள், கொள்கைகள், பதவிக்காலம், என்பவற்றை தீர்மானித்து உள்ளூராட்சி மன்றங்களைத் தாபிக்கின்றன .பிராந்தியத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பணிகளின் மேற்பார்வைக்கும் கலைப்பதற்குமான அதிகாரம் மாகாண சபைக்குரியதாகும். இதன் பொருட்டு ஆளுநர், அமைச்சர், உள்ளூராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர் மற்றும் பிற அரசாங்க அலுவலர்களின் சேவைகள் பெறப்படுகின்றன. அரசியலமைப்பில் 104 உறுப்புரையின் பிரகாரம் மேற்படி ஆணைக் குழுவினாலும் தேர்தல் ஆணையாளர் நாயகத்தினாலும் தேர்தல் சட்டத்திற்கு இணங்க உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுகின்றன. மேற்படி ஆணைக்குழு இதுவரை நிறுவப்படாமையால் தற்போது உள்ள தேர்தல் ஆணையாளரால் அதிகாரங்கள் பிரயோகிக்கப்பட்டு தேர்தல் சட்டம் அமுலாக்கப்படுகிறது.உள்ளூராட்சி எனும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் வெளியிடப்படுகின்ற வர்த்தமானி அறிவித்தல் மூலமாகவே உள்ளூராட்சி மன்றங்கள் நிறுவப்படுகின்றன.இதன் மூலமாகவே நிறுவப்படுகின்ற பிரதேசம், அதன் எல்லைகள் மற்றும் உத்தியோகபூர்வ பெயர் ஆகியவை வெளியிடப்படும்.முதலில் நிறுவப்பட்டு பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு பேணி வரப்படுகின்றன.
 
 
 
2023 உள்ளூராட்சி சபைத் தேர்தல
தொடர்பில்  நாம் தேர்தல் ஆணையாளரிடம் சில கேள்விகள் வினவினோம்.
 
கேள்வி; எதிர்வரும் 25ம் திகதி திட்டமிட்ட படி தேர்தல் நடைபெறுமா?
 
பதில்; நாட்டில் நிலவும் நிலைமையின் அடிப்படையில் இன்னும் குறிப்பிட்ட சில நாட்களில் தேர்தலை வைப்பது என்பது பிரத்தியேகமாக முடியாத ஒரு காரணமாகும் என நான் எண்ணுகின்றேன். எனினும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக தேர்தல் நடைபெறும் நாளில் எந்த மாற்றமும் செய்யப்டவில்லை அது குறிப்பிட்டவாரே ஏப்ரல் 25 எனும் திகதியிலேயே இருக்கின்றது.
 
கேள்வி; குறிப்பிட்ட திகதியில் தேர்தலை நடத்த முடியாததற்கான காரணம் என்ன?
 
 
பதில்; தேர்தல் என்பது முற்றிலும் ஒரு முறைமை ஒன்றின் அடிப்படையில் செயற்படுகின்ற செயற்பாடாகும். உதாரணமாக ; தபால் தேர்தல் நடைபெற்று 21 நாட்களில் பிரதான தேர்தல் நடைபெறும். தற்போதைய நிலைமையின் அடிப்படையில் அதற்கான கால வரையரை போதுமானதாக இல்லை என அவர் தெரிவித்தார்.
 
மேலும் நாம் அவரிடம் இவ்வாறு காலம் செல்லக் காரணம் என்ன என்று  வினவிய போது,
 
பெப்ரவரி மாதத்தில் எமக்கு தபால் தேர்தலுக்கான சீட்டுகள் கிடைக்க பெற்று இருப்பின் முறையாக தேர்தலை வைக்க முடியுமாக இருந்திருக்கும். தற்போது தேர்தல் பின்னோக்கிச் செல்வதற்கும் அதுவே காரணம். ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையே இதற்கான மூல காரணம் என அவர் தெரிவித்தார்.
 
 
-அப்ரா அன்சார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.