நாட்டில் எங்கும் சிறுவர் கடத்தல்கள் இடம்பெறவில்லை - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ
 
பல்வேறு பகுதிகளில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில் உண்மை இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் எங்கும் இவ்வாறான சிறுவர் கடத்தல் அல்லது காணாமல் போதல் இடம்பெறவில்லை என நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
“குறிப்பாக இத்தினங்களில் சமூக வலைத்தளங்களில் நாடளாவிய ரீதியில் சிறுவர் கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுவதாக பரவி வருகின்றது. மேலும், நாட்டின் சில பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக மன்னார், தலை மன்னார், திருகோணமலை, கிளிநொச்சி என பல்வேறு முறைப்பாடுகள் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக கிடைத்துள்ளன. ஆனால் இது தொடர்பான விசாரணைகளில் இதுவரை சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை, மேலும் விசாரணையின் போது சில சந்தேகத்திற்குரிய விடயங்கள் தெரியவந்துள்ளன..
உண்மையில் வேன்களில் வந்து குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து எங்கும் பதிவாகவில்லை. ஆனால் சில இடங்களில் பதற்றமான சம்பவங்கள் நடந்தன. மேலும் பல்வேறு பகுதிகளில் வதந்திகள் பரவின. மேலும் இவர்தான் குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அப்படிப்பட்ட நபர் குறித்து இலங்கை பொலிஸ் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மேலும், குழந்தை கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு குறிப்பிட்ட ஒருவரை அடையாளம் காண்பதற்கு ஊடகங்களின் உதவியை நாங்கள் கோரவில்லை. மேலும், பல்வேறு குழந்தைகள் கடத்தப்பட்டு காட்டுக்குள் மறைத்து வைக்கப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவை தொடர்பில் ஆய்வு செய்தபோது, ​​இவை பல்வேறு தேவைகளுக்காக வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும், வேறு நாடுகளில் இடம்பெறும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வெளியிடப்படுவதை அவதானிக்க முடிகிறது. எனவே, தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என பொதுமக்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் போலியானது என தெரியவந்துள்ளது. இவ்வாறான குழந்தைகள் கடத்தப்பட்டதாகவோ அல்லது காணாமல் போனதாகவோ நாட்டில் எங்கும் பதிவாகவில்லை. அது போலியான தகவல். மேலும் வெளிநாடுகளில் உள்ள வீடியோக்கள்தான் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.