அண்மையில் ஒரு அரசியல் விமர்சனம் வாசித்தேன். அதில், தமிழக மற்றும் கேரள மாநில மக்கள் அரசியல் விவகாரங்களில் தெளிவாக உள்ளார்கள். அதனால், ஏனைய மாநிலங்களில் உள்ள மக்களை ஏமாற்றி அரசியல் நடாத்துவது போல் இன, மத, சாதிய அரசியல் சாத்தியப்படாது என்றிருந்தது. குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு இம் மாநிலங்களில் ஆதரவு குறைவாக இருப்பதின் மூலம் இது தெளிவாகிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சரி, விடயத்துக்கு வருகிறேன். இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு. நடைமுறையில் காணக் குறைவாக இருந்தாலும் ஜனநாயக அரசியல் குறித்து அதிகம் பேசப்படுகின்ற ஒரு நாடு என்று இந்தியாவை சொல்ல முடியும். பகுத்தறிவுக் கருத்துக்களையும், அரசியல் தெளிவுகளையும் (Political Literacy) மக்கள் அடிக்கடி பெறுகிறார்கள்.  சினிமா எனும் சாதனம் அதனை சிறப்பாகவே செய்து வருகிறது.

அண்மைக் காலங்களில், மேற் குறிப்பிட்ட இரண்டு மாநிலங்களினதும் அரசியல் ரீதியான போக்கை மாற்ற பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுவதை நாம் காண்கிறோம். அடிக்கடி கேட்கிறோம். அந்த வகையில் அதற்காக இப்போது கையில் எடுத்திருக்கும் சாதனம் தான் 'சினிமா'. ஆட்சிக் கதிரையைக் காக்க சினிமாவை பயன்படுத்துதல் என்பது புதிய விடயமல்ல. ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்ட ஒன்றுதான்.

ஆட்சிபீடத்துக்கான பொதுப்புத்தியை கட்டமைப்பதிலும், ஆட்சிக் கதிரையைக் காக்க பொதுப்புத்தியைக் கட்டமைப்பதிலும் சினிமா எனும் சாதனம் அந்த வகையில் வெற்றிச் சாதனம் தான். ரஷ்ய சினிமாக்கள் இதற்கு முன்னோடியானவை. வரலாற்று நெடுகிலும் அவதானித்தால் இந்தியாவிலும் இந்த நோக்கில் சினிமா எனும் சாதனம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

நிகழ்ச்சி நிரல் (Agenda) தயாரித்து, திட்டமிட்டு, பொதுப்புத்தியை கட்டமைத்த, அதில் வெற்றியீட்டிய ஹிட்லரின் வரலாறு நம்முன் உள்ளது. அது போன்ற பல அரசியல் பீடங்களின் வரலாற்றையும் நாம் அறிவோம். வானொலி, பத்திரிகைக் காலத்திலேயே இது நடந்துள்ளது என்றால் சினிமா அந்த வகையில் அதற்கான அவற்றைவிட வல்லமையுள்ள சாதனம் தான் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

இந்தியா சினிமாத் துறையில் முன்னிற்கும் நாடு. சினிமாவுக்கான இந்திய சந்தை விசாலமானது. சினிமா நுகர்வும் அதிகம். சினிமா ஊடாக ஒரு கருத்தை இலகுவாக நகர்த்த முடியும். கருத்தை நகர்த்துதல் என்பதிலும் ஒரு நாசுக்கான போக்கு வேண்டும் திணிக்கக் கூடாது என்கிற பார்வை மிக முக்கியமானது. இங்கே, கருத்தை நகர்த்துதல் என்பதற்கு அப்பால் பொதுப் புத்தியை கட்டமைத்தல் என்பது பாரதூரமானது. அதுவும் 'அரசியல் அதிகாரத்துக்கான, ஆட்சிபீடத்துக்கான' என்று வரும் போது அது இன்னும் பாரதூரமானது.

அரசியலுக்கான பொதுப் புத்தியை கட்டமைக்க காரணிகள் தேவை. மதம், இனம், மொழி, சாதியம் போன்ற வரலாற்று நெடுகிலும் பயன்படுத்தப்பட்டு வந்த காரணிகள் பல உள. இவை உடன் பற்றிக் கொள்பவை. தேசியம், நாட்டுப் பற்று என்பன மெல்லப் பற்றிக் கொள்பவை. இவற்றை முன்னிறுத்தி அரசியலுக்கான பொதுப்புத்தி வடிவமைக்கப்பட்டு வந்திருப்பதை நாம் வரலாற்று நெடுகிலும் காண்கிறோம்.

இப்போது நாம் வாழும் காலம் இணைய வசதியுள்ள காலம். இந்தக் காலத்தில் எல்லாக் கருத்துக்கும் மிக வேகமாக ஆள் சேர்வர். மிக வேகமாக நிலைப்பாடுகளுக்கும் வந்துவிடுவர். மிக வேகமாக குறித்த கருத்தை நம்பி செயலுக்கும் இறங்கி விடுவர். வேகமாக ஏமாந்தும் விடுவர். காரணம் நாம் பின் உண்மைச் சமூகத்தில் (Post-Truth Society) வாழ்கிறோம். இங்கே தகவல்களை நம்புவதும் பின் ஏமாறுவதும் வேகமாகவே நடக்கிறது.

எனவே, முதல் பந்தியில் குறிப்பிட்ட பின்னணியில் மேற்குறிப்பிட்ட விடயங்களோடு அடுத்தடுத்து வெளியாகியுள்ள மற்றும் வெளியாக உள்ள லவ்ஜிஹாத், கேரளா ஸ்டோரி, புர்கா, பர்ஹானா மற்றும் இன்ன பிற திரைப்படங்கள் அவதானிக்கப்பட வேண்டியவை. ஆட்சிபீடத்துக்கான பொதுப்புத்தியை கட்டமைக்க சினிமா எனும் சாதனத்தை கையிலெடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்திய ரூபா இலங்கையில் புழக்கத்துக்கு வருகிறது என்பது ஒரு செய்தி. ரூபா மாத்திரம் வருமா அல்லது வேறேதும் எதிர்காலத்தில் வருமா என்பது கேள்வி. எனவே, இந்திய சினிமாவை நுகர்கின்ற இலங்கை நுகர்வாளர்கள் இந்த அரசியலையும் தெளிவோடு நுகர்வார்கள் என்று நம்புவோம்.

இஸ்பஹான் சாப்தீன்
08 05 2023

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.