உலகில் கொரோனா சர்வதேச அவசர நிலை முடிந்தது!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் பெருமளவு குறைந்து விட்ட நிலையில், தற்போது கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அடுத்த சில வாரங்களில் இந்த வைரஸ் காட்டுத்தீ போல பரவி உலகம் முழுவதும் வியாபித்தது. கொரோனாவை கட்டுப்படுத்த மிகக் கடுமையான பொதுமுடக்க கட்டுப்பாடுகளை சீனா முதலில் விதித்தது.
இதைப் பின்பற்றி பிற நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த பொது முடக்க கட்டுப்பாடுகளை கொண்டு வந்தன. கொரோனா பெருந்தொற்று பல லட்ச கணக்கான மக்களை பாதித்து பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. இதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு கொரோனாவை சர்வதேச அவசர நிலையாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி அறிவித்தது.
கொரோனா பெருந்தொற்று அதன் பிறகு கிட்டதட்ட பல அலைகளாக வந்து தாக்கியது. தடுப்பூசி முழு வீச்சில் போட தொடங்கிய பிறகே கொரோனாவின் வீரியம் குறையத் தொடங்கியது. கொரோனாவுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டதோடு, பல லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டது.
தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் பெருமளவு குறைந்து விட்ட நிலையில், தற்போது கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறுகையில், “கொரோனா உலகை மாற்றி விட்டது. நம்மையும் மாற்றிவிட்டது. கொரோனா பெருந்தொற்ற்றின் சர்வதேச சுகாதார அவசர நிலை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கிறோம்.
எனினும் கொரோனா அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. கடந்த வாரத்தில் கொரோனா பெருந்தொற்றால் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒருவர் என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டது. எனவே தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் அறிவிப்பு என்னவென்றால், இனியும் மக்கள் இதுகுறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்பது தான்” என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.