ஜனாதிபதி கண்ட அமீர் ஒருவரை;
துறை மண் 'அமீர்' ஆகக் 
கொண்டால் சிறப்பு!

21 ஆவது அரசியலமைப்பின் ஏற்பாட்டிலுள்ள எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினராக அதிமேதகு ஜனாதிபதியினால் உடன் அமுலாகும் வகையில் நியமனம் பெற்றுள்ள மதிப்பிற்குரிய. அஷ்ஷெய்க். எம்.ஐ.எம். அமீர் நளீமி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...!

அரசியல் யாப்பு சபையின் தவிசளாராக கௌரவ சபாநாயகர் செயற்படுவார் அச் சபையில் பிரதம அமைச்சர், எதிர்க் கட்சி தலைவர் மற்றும் இரண்டு அல்லது மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுடன் 3 அல்லது 4 சிவில் சமூகத்தினரும் உள்வாங்கப்படுவர். 

இதனுடன் இணைந்ததாக சுதந்திர ஆணைக் குழுக்களும் 21 ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் உருவாக்கப்பட்டதாகும். அவ்வாறு அமையப் பெற்ற ஆணைக் குழுவுக்கே அஷ்ஷெய்க். அமீர் நளீமி அவர்கள் ஜனதிபதியினால் நியமனம் பெற்றுள்ளார்கள். இந்த நியமனமானது 3 வருட பதவிக் காலத்தை கொண்டதாகும்.

தனது சேவைக் காலத்தில் பெரும் பகுதியை சிவில் சமூகத்துக்கான பதவிகளில் அலங்கரித்த இவர். சம்மாந்துறை மண் கண்ட அறிவு, அமைதி ஆற்றல், பண்பாடு, நுணுக்கமான உயிரோட்டம் கொண்ட தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட சாதுவான ஒருவர். 

நிர்வாக சேவையில் படித்திறன் வளர்ச்சி கண்டு 1987 இல் இலங்கை நிர்வாக சேவை – தரம் 1 (SLAS - I) இற்குள் நுழைகிறார். அப்போது இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் உதவி ஆணையாளராக செயற்பட்டு பின்னர் 1990 களில் அம்பாறை மாவட்ட உதவி காணி ஆணையாளராகவும், காணி திருத்த ஆணைக்குழுவின் இன் பணிப்பாளராகவும் செயற்பட்டு பின்னர் 1992 களிலிருந்து சில காலம் சம்மாந்துறை – கல்முனை பிரதேச செயலாளராகவும் கடையாற்றினார். 

2000 ஆம் ஆண்டு சம்மாந்துறை பிரதேச சபையின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்.

2003 ஆம் ஆண்டு முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர்.

இதன் பின்னர் சமய விவகார அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர்.

2009 காலப் பகுதியில் சமய விவகார அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர்.

2010 – 2011 காலப் பகுதியில் புனர்வாழ்வு, சிறைச்சாலை, புனரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்.

2021 – 2013 களில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்.

பின்னர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு, தொலைத் தொடர்பு அமைச்சின் மேலதிக செயலாளர்.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சின் செயலாளர்.

அதனையடுத்து ஏற்றுமதி விவசாயம் இராஜாங்க அமைச்சின் செயலாளர்.

இப்படி அடுக்கடுக்காக சொல்லுமளவு இலங்கை நிர்வாக சேவையின் உயர் பதவிகள், அமைச்சு செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர் என்று இறுதியாக 2021 காலப் பகுதியில் இலங்கை வெளிநாட்டு சேவையில் அரசினால் உள்ளீர்க்கப்பட்டு இலங்கை – சவூதி தூதுவராலயத்தின் அமைச்சு ஆலோசகராக செயற்பட்டு பின்னர் அரச நிர்வாக சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர். 

இவைகள் மட்டுமல்லாது தனது உயர் நிர்வாக சேவைக் காலத்தில் 2009 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் புலிப் பயங்கரவாதிகளால் மாத்தறைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலிலும் சிக்குண்டு உயிர் தப்பி இந் நாட்டின் நிர்வாக சேவையில் சிறப்புப் பணியாற்றிவர்.

இந்த காலப் பகுதியின் இடையில் 2017 – 2019 வரையான காலப்பகுதிகளில் சம்மாந்துறையின் கட்டொழுங்குகளை பேணக்கூடிய சபையான மஜ்லிஸ் அஷ்ஷூராவின் தலைவராகவும் செயற்பட்டவர். 

இப்படி சிவில் சமூக செயற்பாடுகளில் நிர்வாகத்திறன் கொண்ட அஷ்ஷெய்க். அமீர் நளீமி அவர்களை தற்போது ஜனாதிபதியின் நேரடி நியமனத்தில் இலங்கையின் சுதந்திர ஆணைக்குழு கௌரவித்துள்ளது. 

பலரும் பதவிகளுக்காக முண்டியடித்து உயிர்களைக் கூட காவு கொண்ட வரலாறுகள் இருக்கின்ற இக் கால கட்டத்தில் பதவிகளுக்கும், அற்ப அரசியல் ஆசைகளுக்கும் சோரம் போகாத ஒருவராக தன்னை இறைபக்தியுடன் திடமாக கொண்டியங்கும் இவரை சம்மாந்துறை மண் எதிர்வரும் காலங்களில் முச் சபைகளில் ஏதேனும் ஒரு சபையில் தலைவராக கொண்டு அழகு பார்க்கலாம் என்ற உள்ளார்ந்த எதிர்பார்ப்பு என்னுள்ளும், பலரிடமும் உலாவருவதை அவதானிக்க முடிகிறது. 

நிலையிழந்து, ஒரு பக்க அரசியல் சாயம் கொண்டு ஊரின் சபைகள் நிர்ப்பந்திக்கப்பட்ட சந்தர்ப்பவாத கயிறுகளால் இறுகக் கட்டி அமுக்கம் கொள்ளுகிற அசட்டையான நிர்வாகங்கள் எமதூரில் மட்டுமல்ல. எத்தனையோ பல ஊர்களில் தற்காலத்தில் மோட்சம் பெற்றுள்ளன. 

உண்மையில், சிவில் சமூகங்களில் தலைமைத்துவம் என்பது 'முட்கள் மேல் நடப்பது' போன்றாகும். இதை நான் உரையாடும் போது பல முறை என்னிடம் அமீர் நளீமி அவர்கள் கூறுவார். அதே நேரம் அவர் தனது பெறுமதியான தலைமைத்துவத்தின் பொறுப்பு குறித்து இறைவனிடம் பதில் கூற வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதையும் அடிக்கடி பேசுவார். 

அது மட்டுமல்ல. இவருக்கு இளைஞர்கள் மத்தியிலுள்ள செல்வாக்கையும், மரியாதையையும் ஒரு நாள் அறியக் கிடைத்தது. அந்த நிகழ்வை நேரில் கண்ட போது மெய் சிலிர்த்தது. இற்றைக்கு சில வருடங்களுக்கு முன் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியலாயத்தின் பழைய மாணவர் சங்கம் தெரிவானது. 

அதற்கு ஏராளமான பழைய மாணவர்கள் சமூகமளித்திருந்தனர். அந்த சமயத்தில் அங்குள்ள பலர் வலிபர்கள் என்பதால் பிணக்குகள், வாக்குவாதங்கள் அதிகரித்தவண்ணமே காணப்பட்டன. குறித்த நிர்வாகத்தை தெரிவுசெய்வதில் நீண்ட நேர வாதப் பிரதிவாதங்கள் வந்திருந்தவர்கள் மத்தியில் செல்லுகையில் அங்கு பிரசண்ணமாகி முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒரு ஊரின் முன்னாள் எம்.பி. சமரசம் செய்வதற்காக எழுந்தார். 

பிணக்குள் அதிகரிக்கவே எம்.பி. எழுந்து சபைக்கு தலைமை தாங்கும் வண்ணம் பேசுகையில், 'பெசுங்கின நெருப்பு பற்றியெழுந்த மாதிரி' சபையில் அமளிதுமளி வலுத்தது. மாறி மாறி வாக்குவாதம். இறுதியில் நிர்வாகத் தெரிவே நடைபெறாமல் போய்விடும் என்கின்ற நிலை சூழ்ந்து விட்டது. 

அந்த சமயத்தில் அஷ்ஷெய் அமீர் நளீமி அவர்கள் எழுந்து 'மைக்' ஐ கையிலெடுத்துதான் தாமதம் உடனே சபை மண்டபமே அமைதியானாது. பின்னர் சபையை தலைமை தாங்கி ஒரு நிர்வாகத்தை தெரிவு செய்துகொடுத்து விட்டுச் சென்றார். 

அப்போது ஒரு விடயம் புலப்பட்டது. ஊரின் முழு வினைத்திறனையும் கையில் சொருகியுள்ள அந்த எம்.பி. யின் கதையை காதிலும் வாங்காத இளைஞர் சமூகம் இவருக்கு கொடுத்த மரியாதை உயர்வாக மிளிர்ந்தது. 

இப்படி பலரும் மதிக்கின்ற, பலரையும் மதிக்கின்ற ஒரு மனிதருக்கு இன்று அரசினால் மீண்டும் கௌரவம் வழங்கப்பட்டு உயர் பதவியொன்றால் அழகு பார்க்கப்படுகிறது. அப்படியான ஒருவரை எதிர்வரும் காலங்களில் ஊரின் உயர் சபை தலைமைத்துவ ஆசனங்களில் வைத்து துறை மண் அழகு பார்க்குமா!

✍️ கியாஸ் ஏ. புஹாரி

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.