20 கோடி தங்க கடத்தல் – 5 பேர் கைது!
 

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் வழியாக 30 கிலோ மீட்டர்தூரத்தில் இலங்கை நாட்டின் தலைமன்னாரை சென்றடைய முடியும். இதன் காரணமாக 2 நாடுகளுக்கும் இடையே கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இங்கிருந்து கடல் அட்டை, மஞ்சள் கிழங்கு, வலி நிவாரண மாத்திரைகள், பீடி இலைகள் மற்றும் அந்த நாட்டில் தட்டுப்பாடுடைய பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையில் இருந்து கஞ்சா, தங்க கட்டிகள் உள்ளிட்டவையும் சட்டவிரோதமாக கடல் வழியாக கடத்தப்பட்டு வருகிறது.
தற்போது மதுரை, திருச்சி, சென்னை ஆகிய விமான நிலையங்களில் சுங்கத்துறையினரின் கண்காணிப்பு அதிகரித்துள்ளதால் இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடல் வழியாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதனை தடுக்க இந்திய கடலோர காவல் படையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனாலும் கடத்தல் சம்பவங்களை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தல்காரர்கள் தங்க கட்டிகளை அதிக அளவில் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு தகவல் வந்தது.
கடத்தல்காரர் ஒருவரின் செல்போன் நம்பரை கண்டறிந்து அதனை அதிகாரிகள் கண்காணித்தனர். அந்த போன் மூலம் நடந்த உரையாடல்களும் சேகரிக்கப்பட்டது. அப்போது கடந்த 31 ஆம் திகதி பிளாஸ்டிக் படகு மூலம் 3 பேர் தங்க கட்டிகளை கடல் வழியாக கடத்தி வருவது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் இந்திய கடலோர காவல் படையின் உதவியை நாடினர். இதைத்தொடர்ந்து இரு துறையினரும் கூட்டாக செயல்பட்டு மண்டபம் அருகே உள்ள கடல் வழித்தடத்தில் தீவிர ரோந்து மேற்கொண்டனர். அப்போது மணாலி தீவு அருகே ஒரு பிளாஸ்டிக் படகு வந்து கொண்டிருந்தது. அதில் இருந்த 3 பேர் ரோந்து படகை பார்த்ததும் தாங்கள் கொண்டு வந்த பார்சலை கடலுக்குள் வீசி எறிந்தனர்.
இதை கண்ட அதிகாரிகள் மற்றும் கடலோர பொலிஸார் படகில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து 3 பேரிடமும் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், இலங்கையில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்ததும், அதிகாரிகளை கண்டதும் அந்த பார்சல்களை கடலில் வீசியதும் தெரியவந்தது.
மேலும் 3 பேர் கொடுத்த தகவலின்பேரில் அதே நாள் இரவு மற்றொரு படகில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 21.26 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை பொலிஸார் பிடித்தனர். இதற்கிடையில் நடுக்கடலில் வீசப்பட்ட தங்க கட்டி பார்சலை தேடும் பணியை அதிகாரிகள் முடுக்கிவிட்டனர்.
கடந்த 2 நாட்களாக மணாலி தீவு அருகே இரவும், பகலுமாக கடற்படை வீரர்கள், நிபுணத்துவம் பெற்ற நீச்சல் வீரர்கள் ஆகியோர் ஆழ்கடலில் குதித்து தங்க கட்டி பார்சல்களை தேடினர். கடலுக்கு அடியில் சென்று தேடும் ஸ்கூபா டைவிங் வீரர்கள், கடலில் முத்து எடுக்கும் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர் நவீன எந்திரங்களுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.