- ரிஹ்மி ஹக்கீம் -

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் 78வது பிறந்த தினம் (29) இன்றாகும்.

இலங்கை அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கும் போது பண்டாரநாயக்க குடும்பத்திற்கு தவிர்க்க முடியாத இடமொன்று இருக்கிறது. 

சந்திரிக்கா அம்மையார் 1945 ஜூன் 29 இல் அப்போதைய அமைச்சர் S.W.R.D.பண்டாரநாயக்க மற்றும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆகியோருக்கு மகளாக பிறந்தார். 

1959 இல் சந்திரிக்கா அம்மையாருக்கு 14 வயதாகும் போது, நாட்டில் பிரதமர் பதவியிலிருந்த அவரது தந்தை பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவரது தாயார் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். ஸ்ரீமா அம்மையார் உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு பிரதமர்களின் புதல்வியான சந்திரிக்கா பண்டாரநாயக்க பிரான்ஸில் உயர்கல்வியை பூர்த்தி செய்தார். 1972 இல் நாடு திரும்பிய அவர் தன்னுடைய தாயார் பிரதமர் ஸ்ரீமா அம்மையார் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்ததுடன், கட்சியின் பெண்கள் பிரிவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

1978 இல் பிரபல நடிகரும், அரசியல் செயற்பாட்டாளருமான விஜயகுமாரதுங்கவை திருமணம் செய்தார். அவர்களுக்கு யசோதரா குமாரதுங்க மற்றும் விமுக்தி குமாரதுங்க என்ற பெயர்களில் மகள் ஒருவரும், மகன் ஒருவரும் பிறந்தனர். எனினும் 1988 இல் விஜயகுமாரதுங்க படுகொலை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திற்கு புகலிடம் கோரி சென்ற சந்திரிக்கா அம்மையார் 1990 இல் நாடு திரும்பியதனை தொடர்ந்து, மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்தார். 

1993 இல் மேல் மாகாண சபை தேர்தலில் எதிர்க்கட்சியின் பிரதான வேட்பாளராக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து 1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில், மக்கள் கூட்டணியில் (PA) போட்டியிட்டு 464,588 விருப்பு வாக்குகளை பெற்று பெருவெற்றி பெற்றதுடன்,  மக்கள் கூட்டணி அரசாங்கத்தில் பிரதமர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதுடன், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைப்பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. 

குறித்த தேர்தலை தொடர்ந்து மக்கள் கூட்டணி (PA), ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தமை விசேட அம்சமாகும். அதனை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் 17 வருட தொடர் ஆட்சி நிறைவுக்கு வந்தது.

அதனை தொடர்ந்து அதே வருடத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்கவை எதிர்த்துப் போட்டியிட்டு 47 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று (62.28%) பெருவெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதனை தொடர்ந்து தன்னுடைய தாயார் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை பிரதமராக நியமித்தார். 

மேலும் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவை எதிர்த்துப் போட்டியிட்டு 43 இலட்சத்திற்கும் (51.12%) அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். 

குறித்த தேர்தலின் இறுதிப்பிரச்சார கூட்டத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதுடன், சந்திரிக்கா அம்மையார் படுகாயமடைந்து வலக்கண் பார்வையை இழந்தார்.

அவர் 1994 முதல் 2005 இல் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் வரை அவர் ஜனாதிபதி பதவியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. அவருடைய இளைய சகோதரரே முன்னாள் சபாநாயகர் அநுர பண்டாரநாயக்க ஆவார்.

2005 ஆம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் 25 ஆவது இடத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை Forbes சஞ்சிகை பட்டியலிட்டிருந்தமை விசேட அம்சமாகும்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.