கடவுச்சீட்டுக்காக கைவிரல் இடும் வசதியை கல்முனையில் ஏற்படுத்துக.!
ஜனாதிபதிக்கு யஹியாகான்
அவசரக் கடிதம்..!

கடவுச்சீட்டுக்காக விண்ணப்பித்து - கைவிரல் அடையாளம் இடும் வசதியை கல்முனை பிரதேச செயலகத்திலும் ஏற்படுத்தித் தருமாறு முஸ்லம் காங்கிரஸ் பதில் பொருளாளர் ஏ.சி. யஹியாகான், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :-

கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றது. இது உண்மையில் பாராட்டுதலுக்குரிய விடயம். 

நாடு , இன்று எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடியில் கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிக்க கொழும்பு மற்றும் வவுனியா செல்வது என்பது பெரும் செலவுமிக்கதாகும். அதனை இன்று முதல் ஒன்லைன் வசதி மூலம் இலகுவாக்கியிருப்பது பல்லாயிரம் விண்ணப்பதாரர்களுக்கு இனிப்பான செய்திதான்.

அதேவேளை - கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்காக கைவிரல் அடையாளங்களை பதிவு செய்வதற்காக - கிழக்கின் முக வெற்றிலை என அறியப்படும் கல்முனை மாநகரம் தவிர்க்கப்பட்டிருப்பது இங்குள்ள மக்களுக்கு பெரும் துயர் நிறைந்த செய்தியாகவே பார்க்கப்படுகின்றது.

அம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறை மற்றும் பொத்துவில் பிரதேச செயலகங்கள் இதற்காக தெரிவு செய்யப்பட்ட போதிலும் - கல்முனை தொகுதி மக்களை பொறுத்தவரை - சம்மாந்துறை மற்றும் பொத்துவில் பகுதிகள் தூரம் கொண்டவை.

எனவே - கைவிரல் அடையாளம் இடும் வசதியை , கல்முனை பிரதேச செயலகத்திலும் ஏற்படுத்தித் தருமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன் என - ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கடிதத்தின் பிரதி - குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு பொறுப்பான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கும்  - யஹியாகான் அனுப்பி வைத்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.