கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளா் (நிருவாகம்) தேசமாண்ய ஆதம்வாவா மன்சூரின் 39 வருட கால அரச சேவையை பாராட்டி கௌரவிக்கும் விழாவும், அவர் பற்றிய நூல் வெளியீடும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) 4.00 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இவ்விழாவையொட்டி அவர் பற்றிய கட்டுரை

சம்மாந்துறை சாதனையாளர்கள் வாழ்த்தும் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாபெரும் விழாவுக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர், தென்கிழக்கு பல்ககலைக்கழக உபவேந்தர், மட்டக்களப்பு மாவட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள், பிரதேச செயலாளர்கள்  உள்ளிட்ட பல உயரதிகாரிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், 5 நூறுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்

அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேசத்தைக் கொண்ட உதுமாலெவ்வை ஹாஜியார் ஆதம்பாவா மற்றும் அலியார் லெவ்வை பாத்தும்மா ஆகியோருக்கு 04வது பிள்ளையாகப் பிறந்த ஆதம்வாவா மன்சூர், சம்மாந்துறை தாறுல் ஊலும் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரக் கல்வியையும், யாழ். பல்கலைக்கழகத்தில் தனது உயர் கல்வியையும் கற்றார். 

1989 ஆம் ஆண்டு நிருவாக மானிப்பட்டத்தினை முதற்தரத்திலேயே சித்திபெற்று சிறந்த ஆளுமையுள்ள ஒரு மாணவனாகத் திகழ்ந்ததுடன், 2009 ஆம் ஆண்டு பொது நிர்வாக முதுமானிப் பட்டத்தையும் பெற்றார். அவரது கல்விப் பருவத்தில் மாணவத் தலைவனாகவும், கற்றல் செயற்பாடுகளில் மட்டுமல்லாமல் விளையாட்டு, கலை கலாசார மற்றும் மேடை நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி ஒரு முன்னணி மாணவனாகவும் திகழ்ந்துள்ளார். 

அம்பாறை மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டு, சம்மாந்துறையில் வசிக்கும் தேசமாண்ய ஆதம்வாவா மன்சூர், 1984 ஆம் ஆண்டு உதவி ஆசிரியராக முதல் நியமனத்தைப்பெற்று பண்டாரவள ஹீல்ஓயா முஸ்லிம் வித்தியாலயத்தில் தனது ஆசிரியர் பணியை ஆரம்பித்தார். 1988 ஆம் ஆண்டு சொந்த ஊரான சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி வந்த நிலையில், “முகாமைத்துவமும், தொழிலார் செயற்பாடுகளும்” பற்றிய 10 ஆயிரம் சொற்கள் கொண்ட ஆய்வு நூல் ஒன்றை எழுதி வெளியீடு செய்த பெருமையும் இவருக்குண்டு. 

6½ வருடங்கள் ஆசிரியராக கடமையாற்றிய இவர், 1991 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் முதலாவது நியமனத்தைப் பெற்று, சொந்த ஊரிலேயே பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து வவுனியா வெல்கல செட்டிக்குளம் பிரதேச செயலாளராகவும், அம்பாறை கமநல ஆணையாளராகவும், திருகோணமலை கமநல ஆணையாளராகவும், பொத்துவில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். கல்முனை உதவிப் பிரதேச செயலாளராக இருந்த காலப்பகுதியில் சாய்ந்தமருது உப பிரதேச செயலகத்திலும் கடமையாற்றினார்.

1995 ஆம் ஆண்டு காதர் மீராசாய்வு பாத்திமா றிசானா என்பவரை கரம் பிடித்த இவருக்கு 02 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். இந்நிலையில், சாய்ந்தமருது உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கு பல நகர்வுகளை முன்னெடுத்து, 2001.02.04 ஆம் திகதி இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தன்று பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டது. இது தரமுயர முழுக் காரணமாக இருந்தவர், இவர் என்று சொன்னால் அது மிகையாகாது. 

சாய்ந்தமருது, கல்முனை, சம்மாந்துறை போன்ற பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராக செயற்பட்ட இக்காலப்பகுதியில் GTZ நிருவனத்தின் உதவியுடன் 15 நாட்கள் தாய்லாந்துக்கும், சிலிடா நிருவனத்தின் உதவியுடன் 15 நாட்கள் மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் களவிஜயம் செய்து அங்குள்ள விடயங்களை ஆய்வு செய்து, அத்திட்டங்களை எமது நாட்டில் செயற்படுத்திய மிகத்திறமையான நிருவாக அதிகாரியாகும்.  

இந்நிலைமையில், 2010 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்திற்கு உள்வாங்கப்பட்ட இவர், நீதி அமைச்சு, கைத்தொழில் அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு போன்ற அமைச்சுக்களின் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். பல்வேறு சமூக சேவைகள் அமைப்புக்களில் பல பதவிகளை வகித்துக்கொண்டு மக்களுக்கு நன்மைதரும் விடயங்களை இற்றைவரை செய்தும் வருகின்றார்.  இதன் நிமித்தம் தேசமாண்ய, தேசகீர்த்தி, சாமசிறி மற்றும் அகில இலங்கை சமாதான நீதவான் போன்ற கௌரவப் பட்டங்களும் இவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக, 3 மாதங்களுக்குள் இலங்கை அபிவிருத்தி நிருவாகத்துக்குமான பொது நிருவாகப் பயிற்சியை பூர்த்தி செய்துள்ளதுடன், பல்வேறுபட்ட தலைமைப் பதவிகள், அமைச்சின் மேலதிக செயலாளர் பதவிகள் என பல பதவிகளில் இருந்த காலப்பகுதியில் அத்துறைசார்ந்த நிறுவனங்கள் மற்றும் அமைச்சுக்களில் நிலவுகின்ற குறைபாடுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ததுடன் அதன் முன்னேற்றப் பாதைக்கும், அபிவிருத்திக்கும் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார். 
39 வருட அரச சேவைக் காலத்தில், 32 வருடங்கள் இலங்கை நிருவாக சேவையில் பல்வேறு பதவிகளில் இருந்த இவர், தற்போது இலங்கை நிருவாக சேவையில் விஷேட தரத்திலுள்ள நிருவாக அதிகாரியாக தேசிய ரீதியில் 12வது இடத்திலும், கிழக்கு மாகாணத்தில் 1வது இடத்திலும் உள்ள இவர், கடந்த 2022.01.07 ஆம் திகதி முதல் இற்றைவரை கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளா் (நிருவாகம்) பதவியிலிருந்து தனது பணியை முன்னெடுத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(பைஷல் இஸ்மாயில்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.