⏩ அம்பாறை மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன…
⏩ 343 வீடுகள் கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும்…
⏩ தற்காலிக வீடுகள் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்காக ரூபாய் 38000 நிதியுதவி…
⏩ கிராமங்களை பாதுகாக்க 38 கி.மீ நீள யானை வேலி…
                                           - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான மோதலின் போது பாரிய பாதிப்புக்குள்ளான அம்பாறை மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கண்ணிவெடிகள் இல்லாத பிரதேசமாக மாவட்டத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் மக்களை கிராமங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவு ஆகியவற்றின் ஆதரவுடன், புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டம் யுத்தத்தின் போது பாரிய சேதங்களுக்கு உள்ளான மாவட்டமாகும். மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு, காஞ்சிரம்குடா, சாகாமம் ஆகிய நான்கு கிராமங்களிலும் 343 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் 72 வீடுகள் கட்டப்பட உள்ளன. மீள்குடியேற்றப்படும் பயனாளிகளுக்கு தற்காலிக வீடுகள் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்காக 38000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

வீடுகளை வழங்குவதற்கான அளவுகோல்கள் தயாரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் அனுமதி பெறப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மேலும், நிரந்தர வீடுகள் கட்டி, குடிநீர், மின்சாரம், சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு பாடுபட்டு வருகிறது.

இப்பகுதியில் 71 பயனாளி குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளதுடன், 93 பொதுக்கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கிரவல; கற்களை பயன்படுத்தி சாலைகள் போடப்பட்டுள்ளன. மேலும் வறண்ட காலநிலையில் பயனாளிகளுக்கு பௌசர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. யானைகளிடமிருந்து கிராமங்களை பாதுகாப்பதற்காக 38 கிலோமீற்றர் நீளமான யானை வேலியும் தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

முனீரா அபூபக்கர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.