⏩ இந்த ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை குறைக்கும் வகையில் அமைச்சர் பிரசன்னவினால் அமைச்சரவை பத்திரம்...

⏩ திட்ட மதிப்பீடு 2,100 மில்லியன் ரூபா...

⏩ இத்திட்டம் பல கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது...

                                 அமைச்சர் பிரசன்ன ரணதுங்க


இவ்வருடம், கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைப்பதற்கும் நிலையான நீண்டகாலத் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவைப் பத்திரமொன்றை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனத்தினால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

கொழும்பு மாநகரப் பகுதியிலும், கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளிலும் வெள்ளத்தைத் தணிக்கும் திட்டங்களை இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனம்  அடையாளம் கண்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி இவ்வருடம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2,100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் பல கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.

மொத்த ஒதுக்கீட்டில் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான திட்டங்களுக்கு 1991 மில்லியன் ரூபாவும் 20 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான திட்டங்களுக்கு 109.00 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

களனி கங்கை  பெருக்கெடுத்து ஓடுவதன் காரணமாக  கொலன்னாவை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வெள்ளத் தணிப்புக்கான உள்கட்டமைப்பு மேம்பாடு இன்றியமையாத வளர்ச்சிக் கூறு ஆகும். கடந்த தசாப்தங்களில், இந்த பகுதிகள் போதுமான மற்றும் பொருத்தமற்ற வடிகால் அமைப்புகளால் தொடர்ந்து வெள்ளத்தால் அச்சுறுத்தப்படுகின்றன.

கொலன்னாவை மழை நீர் வடிகால் மற்றும் சுற்றுப்புற சூழலை மேம்படுத்தி மக்களை அந்த  நிலையிலிருந்து விடுவிப்பதில் முன்னுரிமையளித்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

முனீரா அபூபக்கர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.