தில்லையடி முஹாஜிரீன் இளம் உலமாக்களுக்கு பாராட்டு விழா


   புத்தளம் - தில்லையடி முஹாஜிரீன் அரபுக் கலாபீடத்தின் 2 ஆவது அல் ஆலிம் மற்றும் அல் ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா, கலாபீட அதிபர் மௌலவி முபாரக் அல் - ரஷாதி தலைமையில் (11) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் முஹாஜிரீன் அரபுக் கலாபீட வளாகத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
   இச்சிறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், கௌரவ அதிதிகளாக புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். எச்.எம். நவவி, புத்தளம் மாவட்ட ஜம் - இய்யத்துல் உலமா தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் உள்ளிட்ட அல்ஹாஜ் நிஸாம், அல்ஹாஜ் ஹனீப் பாய் மற்றும் சர்வ மத குருமார்கள், மலேஷியாவிலிருந்து வருகை தந்திருந்த விஷேட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
   அகில இலங்கை ஜம் - இய்யத்துல் உலமா தலைவர் அல் ஆலிம் அல் முஃப்தி எம்.ஐ.எம். றிஸ்வி சிறப்புரை ஆற்றிய இச்சிறப்பு நிகழ்வு, முஹாஜிரீன் கலாபீட நிர்வாகிகள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஊர்ப்பிரமுகர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
   மார்க்கக் கல்வியைக் கற்று உலமாக்களாகப் பட்டம் பெற்றுள்ள (2017) குழுவில் ஆலிம்கள் 6 பேர், (2018) ஆலிம்கள் 6 பேர், (2019) ஆலிம்கள் 12 பேர், (2021) ஆலிம்கள் 10 பேர், (2022) ஆலிம்கள் 7 பேர் மற்றும் (2018) ஹாஃபிழ்கள் 3 பேர், (2019) ஹாஃபிழ்கள் 4 பேர், (2020) ஹாஃபிழ்கள் 2 பேர், (2021) ஹாஃபிழ்கள் 3 பேர், (2022) ஹாஃபிழ்கள் 4 பேர் உள்ளடங்கிய ஆலிம்கள் 41 பேருக்கும் ஹாஃபிழ்கள் 16 பேருக்கும் அன்றைய தினம் சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
   இதேவேளை, குறித்த இளம் உலமாக்களையும், இளம் ஹாஃபிழ்களையும் கலாபீட அதிபர் மௌலவி முபாரக் அல் - ரஷாதி, உப அதிபர் மௌலவி மின்ஹாஜ் (இஹ்ஸானி) உள்ளிட்ட கலாபீட போதனாசிரியர்களினால் வாழ்த்தி மகிழ்விக்கப்பட்டமை விஷேட அம்சமாகும். 
   இவ்விழாவில், "தினகரன்" மலர் வெளியீடும் "தினகரன்"  ஆசிரியர் பீட உதவி ஆசிரியர் ஏ.ஜே.எம். தௌபீக் கினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

( மினுவாங்கொடை நிருபர் )
( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.