⏩ அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் வருமானத்துக்கு ஏற்றவாறு 9 வீட்டுத் திட்டங்களின் கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்படும்...

⏩ நிர்மாணத்துறையை மேம்படுத்துவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் விசேட வேலைத்திட்டம்...

⏩ நிதி அமைச்சின் ஒப்புதலுக்கு உட்பட்டு நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிர்வாக சபைக்கு வீட்டை நிர்மாணித்தல், விற்பனை செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான அதிகாரத்தை மாற்றுவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது...

- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

அரச மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் வருமானத்திற்கு ஏற்றவாறு 9 வீட்டுத்திட்டங்களை விரைவாக நிர்மாணிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கான அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு இந்த வீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ், இலங்கையிலுள்ள ஒப்பந்த நிறுவனங்களினால் இந்த வீடமைப்புத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த வீட்டுத் திட்டங்களை நிர்மாணிப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை ஏற்கனவே 10,430.84 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, வீட்டுத் திட்டங்களின் கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
ஆனால் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் உரிய தரப்பினருடன் கலந்தாலோசித்து இந்த வீட்டுத்திட்டங்களை நிர்மாணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அத்துடன், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் உடன்படிக்கைக்கு உட்பட்டு, இந்த வீடுகளை நிர்மாணிப்பது மற்றும் விற்பனை செய்வது தொடர்பான எதிர்கால தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்த திருத்தங்களுக்கு தேவையான அதிகாரத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிர்வாக சபைக்கு வழங்குவதற்கும் இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் முன்மொழியப்பட்டுள்ளது.
திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் வீட்டுத் திட்டங்களை நிர்மாணிக்கவும், அதற்குத் தேவையான பணத்தைப் பெறுவதற்கு புதிய உத்திகளைக் கையாளவும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

நாடு எதிர்கொண்டிருந்த நிதி நெருக்கடி தற்போது படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகிறது. அதில், கட்டுமானத் துறைக்கும் சலுகைகள் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில் நிர்மாணத்துறையில் புதிய மறுமலர்ச்சி ஏற்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நிர்மாணத்துறையை மேம்படுத்துவதற்காக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

முனீரா அபூபக்கர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.