வரி அறவீட்டில் மோசடி;
கோபா குழுவில் அம்பலம் :குற்றச்சாட்டை இறைவரித் திணைக்களம் நிராகரிப்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு 2022 ஜூன் 30 ஆம் திகதி வரை கிடைக்க வேண்டிய நிலுவையான வரி, தண்டப்பணம் மற்றும் வட்டியின் பெறுமதி 773 பில்லியன் ரூபா என அரசாங்க கணக்குகள் பற்றிய (கோபா) குழுவில் புலப்பட்டது.
இந்தத் தொகையில் 201 பில்லியன் ரூபா சட்டரீதியான சிக்கல்களின்றி வசூலிக்கப்படக்கூடிய வருமானங்களாகவும் 572 பில்லியன்,ரூபா ஒரு சில காரணங்களால் வசூலிப்பது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள தொகையாகவும் உள்ளதாகவும், இந்த வரிப்பணத்தை வசூலிப்பதற்கான முக்கிய காரணியாக RAMIS அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கோபா குழுவில் தெரியவந்தது.
 RAMIS என்பது ஒரு மென்பொருள் முறை. இது சிங்கப்பூரிலிருந்து எடுக்கப்பட்டது. இதன் தொழிற்பாடானது ,வரி வருமானம் அறவிடப்பட‌வேண்டிய தொகை,மொத்த வரித்தொகை, எவ்வளவு தொகை செலுத்தப்பட்டது, யார் வரி செலுத்த வேண்டும் இவ்வாறான அனைத்து தகவல்களையும் காட்டும்.இந்த மென்பொருள் 12  பில்லியன் செலவழித்து 2011/12 காலப்பகுதியில் பசில் ராஜபக்ஷ தலைமையில் கொண்டுவரப்பட்டது.
இவ்வாறு இருந்தும் RAMIS கட்டமைப்பை இறைவரித் திணைக்கள அதிகாரிகள் முறையாக செயற்படுத்தவில்லையென கோபா குழு குற்றம் சுமத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டை இறைவரித் திணைக்களம் நிராகரித்துள்ளது.
 
2022 ஆம் ஆண்டுக்கான வரி வருமானமாக 1852 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதும், 2023 வரவு,செலவுத்திட்டத்தில் 3130 பில்லியன் ரூபாவரை அதிகரிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் கோபா குழு ஆராய்வின் போது சுட்டிக்காட்டினார். 
பெருந்தொகையான வரி வருமானம் நிலுவையில் இருக்கும் சூழ்நிலையில், 2023 வரவுசெலவுத்திட்டத்தில் வரி வருமானம் 69 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டிருப்பதால் இந்த இலக்கை அடைய முடியுமா என்பது பாரிய பிரச்சினையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
இந்த எதிர்பார்க்கப்படும் வரி வருமானம் கிடைக்காவிட்டால், துண்டுவிழும் தொகை அதிகரித்து நாடு என்ற ரீதியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடையமுடியாது போய்விடும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
2023 ஆண்டாகும் போது இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 27 ஆயிரம் கோடி ரூபா வரியை அறவிட தவறியுள்ளதாக தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, முறையாக வரியை செலுத்தாத பாரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் 100 பேரின், சரியான தகவல்கள் இறைவரித் திணைக்களத்திடம் இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.நாட்டில் முன்னெடுக்கப்படும் பாரியளவிலான பரிவர்த்தனைகள் தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக்கொள்ள உரிய முறைகள் எதுவும் இறைவரித் திணைக்களத்திடம் இல்லை என்பது தொடர்பில், மேற்பார்வைக்குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வரி அறவிடுவதற்கு தவறவிடப்பட்டுள்ள இந்தப் பணத்தை மீள பெற்றுக்கொள்வதற்கு பொறிமுறை ஒன்றைத் தயாரிக்கவும், புதிய இறைவரிச் சட்டங்களை தயாரிப்பதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை இந்த மேற்பார்வைக்குழு வழங்கும் எனவும் அதன் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
கோபா குழுவின் முன்னாள் தலைவரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹசிம் , அடுத்த வருடம் அறவிடக்கூடிய வரி வருமானமாக 3.2 பில்லியன் என இறைவரித் திணைக்கள அதிகாரிகள் முன்மொழிந்தனர். நாங்கள் , ஏற்கனவே 5 பில்லியன் அளவில் வரி அறவிட உள்ளதை அவர்களுக்கு சுட்டிக்காட்டினோம். 2022 ஆம் ஆண்டுக்கான வரி வருமானம் 1852 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இது 2023 வரவு செலவுத் திட்டத்தில் 3130 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டு தற்போது 5 பில்லியன் அளவுக்கு அதிகமாகியுள்ளது. 
இதனை எவ்வாறு அறவிடப்போவது குறித்து கோபா விசாரணைகளின் போது வினவப்பட்டது. அவர்கள் அதனை ஒரு அறிக்கையாக மாத்திரம் முன்வைத்து விட்டு வரி அறவிடும் வேலை நடக்காத மாதிரியான ஏற்பாடுகளையே செய்தனர். இங்கு முக்கியமாக வரி அறவிடும் முறையான RAMIS கட்டமைப்பை அவர்கள் முறையாக செயற்படுத்தவில்லை என்றார்
 RAMIS கட்டமைப்பானது மோசடிகள் இடம்பெறாத  வகையிலே அமைக்கப்பட்டுள்ளது,இந்த மென்பொருள் தொழில்நுட்ப முறையை ஒழுங்காக செயற்படுத்தும் போது மோசடி இடம்பெற வாய்ப்பில்லை. இப்போது வரை அதற்கான உரிமம் (License) சிங்கப்பூரிடம் உள்ளது. இன்னும் இலங்கைக்கு அரசுக்கு மாற்றப்படவில்லை 
இதில் நிறைய பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளன. இந்த RAMIS கட்டமைப்பு இன்னும் ஒழுங்காக செயற்படாமல் இருப்பதற்கு காரணம், இறைவரித் திணைக்கள அதிகாரிகள் முறையாக இது குறித்து பயிற்சியளிக்கப் படவில்லை.  மொத்தமாகவே 25% அளவிலான அறிக்கைகள் மாத்திரம் தான் மென்பொருள் தொழில்நுட்ப முறையில் பதிவேற்றப்பட்டுள்ளது ஏனையவைகளை பதிவிடுவதற்கான திறன் இல்லை என்பது எமது ஆய்வுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
இறைவரித் திணைக்களத்தில் தற்போது கணினிமயப்படுத்தப்படாத முறையிலே பெரும்பாலான வரிசெயற்பாடுகள் இடம்பெறுகின்றன. அதாவது, ஒருவர் 20 இலட்சம் வரி செலுத்த வேண்டும் என்றிருந்தால் இறைவரித் திணைக்கள அதிகாரியொருவர் அவரிடம் நீங்கள் 5 இலட்சம் மாத்திரம் செலுத்தினால் போதும் அதனை மாற்ற முடியும் என கூறி இலகுவாக மோசடியில் ஈடுபடலாம். எனவே தான் இந்த RAMIS கட்டமைப்பு என்பது மிக முக்கியமாக உள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்தார்.
 இதுகுறித்து கணக்காய்வாளர் நாயகம் ……… குறிப்பிடுகையில், இந்த RAMIS கட்டமைப்பை உருவாக்குவதற்கு 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளது.  இருந்தும் அது சரியான மட்டத்தில் இயங்கவில்லையென இதற்கு முன்னர் பல தடவைகள் கோபா குழுவில் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் இது தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இறைவரித் திணைக்களம் ஒப்பந்தம் மற்றும் அது தொடர்பான கொடுப்பனவுகள் குறித்த தகவல்களை எனக்கு இன்னும் வழங்கவில்லை என்றார்
 இக்குற்றச்சாட்டுக்கள் குறித்து இறைவரித் திணைக்கள பொது வரி நிர்வாக பிரதி ஆணையாளர், எம்.எஸ்.எம் ஷியான் பதிலளிக்கையில்,
 RAMIS இல் பிரச்சினை இருப்பதாக கூறி கோபாவினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.அந்த குழுவின் அறிக்கையில் RAMIS இல் பிழைகள் இல்லை, தாமதம் தான் காரணம் என தெரிவிக்கப்பட்டது.பின்னர் IMF யை அழைத்து பரிசீலனை செய்யுமாறு கோரப்பட்டது.அவர்களும் இதற்காக செலவழிக்கப்பட்டது நட்டம் எதுவுமில்லை,பயனாக இருப்பதாக கூறினார்கள்.எனவே RAMIS இனால் எந்த பயனுமில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. RAMIS இல் இப்போது வேலைகள் இடம்பெறுகின்றன.
 குறித்த மென்பொருள் செயலிக்கான பணத்தை செலுத்த தாமதம் ஏற்பட்டதால் அதனை செயற்படுத்தும் அனுமதியை அவர்கள் தருவதற்கு தாமதம் ஏற்பட்டது.இப்போது அதற்கான பணம் செலுத்தியுள்ளதால் மென்பொருள் தொழிற்பாடு நடைபெறுகிறது.பெரும்பாலும் இந்த வருடம் செப்டம்பரில் முழுமையாக முடிவடையும்.அதன் பின்னர் முக்கியமான வரி அறவிடும் முறைமைகள் ஒழுங்காக செயற்படும் என்றார்.
அத்துடன்  RAMIS முறைமை பயனற்றது என்ற குற்றச்சாட்டை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.அந்த முறைமையை முன்னேற்றம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது குற்றம் சாட்டுவது தவறு. ஆவணங்கள் பதிவிடுவது,கணக்கு வேலைகள் அனைத்தும் முழுமையாக இப்போது இடம்பெறுகிறது.2017 ஆண்டுடன் பழைய முறைமைகள் அனைத்தும் நிறைவடைந்தன.அதன் பின்னர் 2017 தொடக்கம் RAMIS முறை மூலமாகவே வரி அறவிடும் செயற்பாடுகள் செயற்படுகின்றது.
 
புதிய முறைமையின் விதிமுறைகளுக்கு ஏற்றாற் போல் முழுமையாக புதிய மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தது.அந்த மாற்றங்களை மற்றும் செயற்படுத்துவதற்கான அனுமதி  270 நாட்கள் தாமதமாகி கிடைத்தது.அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட தொற்று நோய், பொருளாதார நெருக்கடி என்பவற்றால் முன்னேற்றம் செய்வதற்கு தாமதமாகியது என்றும் கூறினார்.
மேலும் , இந்த தாமதத்துக்கு இரண்டு பிரதான காரணங்களாக அமைச்சரவையின் தாமதம், நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளை குறிப்பிடலாம். கோபாவினால் நியமிக்கப்பட்ட குழு, கலந்துரையாடல்களின் போதும் ஏனைய கலந்துரையாடல்களிலும் மொறட்டுவ பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கூறியது, தாமதம் ஏற்பட்டதை தான்.
இம்பாஸ் (impasses structure, Application, Business license, Rules இதெல்லாம் செயற்படுத்தப்பட்டுள்ளது.புதிய முறைமைக்கு தேவையான Application, modification மாத்திரம் தான் எஞ்சியுள்ளன.இந்த ஒவ்வொரு மென்பொருள்களுக்கும் உரிமம் எடுப்பதற்கு பெரியளவில் பணம் செலுத்த வேண்டும்.அதனை வெளிநாட்டு கம்பனிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.IRD ஆனது புதிதாக நிறுவப்பட்ட  நான்கு கட்டமைப்புகளை கொண்ட சட்டங்களை முறையாக அமுல்படுத்துவதாகும். இந்த நான்கு கட்டமைப்புக்களும் முடிந்தால் இந்த RAMIS முறைமை பூரணமாகும்.
 எந்தவொரு நாட்டிலும் கணக்கு நிலுவை (outstanding ) பூச்சியமாகாது.பழையது போக புதியது வந்து கொண்டு தான் இருக்கும்.திணைக்களம் ஒவ்வொரு நாளும் மதிப்பிடுகின்றது.பழைய முறைமையில் வரி கட்டாத நிறைய பேர் இருக்கின்றனர்.அதாவது, அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் இல்லாது இருக்கும், அவ்வாறான பிரச்சினைகள் இருந்தால் அவர்கள் தவணை முறையில் செலுத்துவார்கள்.
இன்னும் சில பேர் அவர்களுக்கு வரி கட்ட வசதியில்லை,சில பேர் மெளனமாக இருப்பார்கள் அவர்களுடைய பெரும்பாலும் சிறிய தொகையான வரியாகவே இருக்கும்.வரி செலுத்தாதவர்களுக்கு நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.இதன் பிறகும் வரி செலுத்தவில்லை என்றால் அடுத்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வது தான் ஒரே வழிமுறையாக இருக்கின்றது.இவ்வாறான நடைமுறைச் சிக்கல்களினாலே வரி அறவிடுவது தாமதமாகியது.
 கோபாவில் இதே பிரச்சினையை தான் திரும்ப திரும்ப கேட்கின்றனர். நீதிமன்றத்தில் ஒவ்வொரு வழக்கும் காலம் எடுக்கும்.இறைவரித் திணைக்களத்துக்குரிய வழக்குகளை வைத்து நாங்கள் அடிக்கடி அவர்களுக்கு கூறுவது தனியான நீதிமன்றத்தை ஒதுக்கி தருமாறு.அப்போது அதில் தேர்ச்சியுள்ளவர்கள் இருப்பார்கள் , வழக்குகள் துரிதமாக நடந்து ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில் வரி செலுத்த வேண்டியுள்ளவர்கள் உள்ளிட்ட பரந்தபட்ட அறிக்கையொன்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய விரைவில் ஜனாதிபதியிடத்தில் கையளிக்கவுள்ளதாக குறிப்பிடுகின்றார்.
 அப்ரா அன்சார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.