பள்ளிவாசலை இடிக்க முயற்சி - முஸ்லிம்கள் தொடர் எதிர்ப்பில் குதிப்பு



பள்ளிவாசலை இடிக்க முயற்சி - முஸ்லிம்கள் தொடர் எதிர்ப்பில் குதிப்பு


சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அரசாங்கம் மதம் மற்றும் சமூகத்தின் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.


இந்நிலையில், சீனாவின் யுன்னான் மாகாணம், யுக்சி நகரில் நஜியாயிங் என்ற மசூதி உள்ளது. இது மிகவும் பழமையானதாகும். இந்த மசூதியில் உள்ள நீல நிற குவிமாடப் பகுதிகளையும், கோபுரங்களையும் (மினார்கள்) இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான உத்தரவை சீன அரசு, கடந்த 2020-ம் ஆண்டு வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே கடந்த சனிக்கிழமை, மசூதியில் உள்ள குவிமாடப் பகுதிகள் மற்றும் கோபுரங்களை (மினார்கள்) இடிப்பதற்காக அங்கு புல்டோசர்கள், கிரேன்கள் கொண்டு வரப்பட்டன. இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள், அங்கு மிகப்பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்து போலீஸாருக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் சீனாவின் ராணுவ வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் மசூதி வளாகத்தில் குவிந்த முஸ்லிம்கள், போலீஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸார், ராணுவ வீரர்கள் மீது அவர்கள் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கைகளில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில் களையும் அவர்கள் வீசி எறிந்து தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.



இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களுடன் போலீஸாரும், ராணுவ அதிகாரிகளும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்களது சமாதானத்தை முஸ்லிம்கள் ஏற்கவில்லை. போலீஸாருக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கருத்துகள்