இலங்கையின் இலக்கிய வரலாற்றிலே அசைக்க முடியாத ஓர் இடத்தை தக்கவைத்துள்ள எழுத்துத் துறையின் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் தான் கலைவாதி கலீல் அவர்கள். 

1943 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி மன்னார் சோனகத் தெருவிலே ஒரு கலைக் குடும்பத்திலே பிறந்த கலைவாதி கலீல் அவர்கள் நேற்றைய தினம் 09.06 2023 இறையடி சேர்ந்தார்கள் ( இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் )

        சிரித்துக் குலாவிய சிறுபராயத்தையும், துள்ளித் திரியும் பள்ளிப் பருவத்தையும் தனது சொந்த மண்ணான மன்னாரிலேயே கழித்த கலீல் அவர்கள் தனது வாழ்க்கைக்கான ஜீவனோபாய வழியாக உலகிலே தலைசிறந்த தொழிலான ஆசிரியர் தொழிலைத் தேர்ந்தெடுக்கின்றார். 

1972, 73 காலப் பகுதியில் பலாலி ஆசிரியர் கலாசாலையில் சேரும் இவர் அங்கு தனது தொழிலுக்கான மேலதிக பயிற்சிகளைப் பெற்று பயிற்றப்பட்ட சித்திர ஆசிரியராக வெளியேறுகிறார் 
பலாலி ஆசிரியர் கலாசாலையில் கற்கும் போது கலையாற்றல் மிக்க பல நண்பர்களின் நட்பு இவருக்கு கிடைக்கப் பெற்றது இவரின் கலை வாழ்க்கையின் ஓர் திருப்புமுனையாகவே அது அமைந்தது எனலாம். 

மன்னாரில் உள்ள அல் அஸ்ஹர் கல்லூரியில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக ஆசிரியராகக் கடமையாற்றுகின்றார். அதனைத் தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு முதல் 1990 ஆண்டு வரையில் கொழும்பு 12 ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரியிலும் கொழும்பு றோயல் கல்லூரியிலும் ஆசிரியராக கடமையாற்றுகிறார். சித்திரத்திலே கைதேர்ந்த இவர் சித்திரப் பாடத்தோடு நின்று விடாமல் தமிழ் பாடத்தையும் திறம்படக் கற்பித்து தமிழ் பேசும் நல்லுலகில் புலமை வாய்ந்த மாணாக்கர்களை உருவாக்கினார். 

1990 ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரையில் அளுத்கமை ஆசிரியர் கலாசாலையில் உதவி அதிபராகவும் , 2000 ஆண்டு முதல் 2005 ஆண்டு வரையில் அளுத்கமை ஆசிரியர் கலாசாலை கல்விக் கல்லூரியாக மாற்றம் பெற்ற போது அதன் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் உதவிப் பீடாதிபதியாகவும் கடமையாற்றிவிட்டு ஓய்வு பெற்றார். 

1956 ஆம் ஆண்டிலே " மறைந்த இருள் " என்ற சிறுகதை மூலமாக எழுத்துத் துறையில் பிரவேசித்த கலைவாதி அவர்கள் தனது முதல் சிறுகதைத் தொகுப்பான " ஒரு வெள்ளி ரூபாய் " என்ற நூலை வெளியிட்டார். அத்தோடு நின்று விடாமல் பல்வேறு துறைசார்ந்த பத்து நூல்களையும் வெளியிட்டார். அதில் புகழ் பெற்ற கவிதைத் தொகுப்புக்களும் அடங்கும். "கருவறையிலிருந்து கல்லறைக்கு " என்ற புதுக்கவிதை தொகுப்பு, பாலஸ்தீன மக்களின் துயரம் கூறும் " ஓ...பாலஸ்தீனமே" என்ற கவிதை நூலோடு கிட்டடியில் இவர் எழுதிய "என் வில்பத்து டயரி " என்ற நூலும் இதில் அடங்கும். 

அதைவிட வெவ்வேறு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட 25 மேற்பட்ட நூல்களின் பிரதம ஆசிரியராகவும், தொகுப்பாசிரியராகவும் ,பணியாற்றியுள்ளார். 
முஸ்லிம் கலாச்சார ராஜாங்க அமைச்சராக இருந்த மர்ஹூம் ஏ. எச். எம் அஸ்வர் அவர்களின் சிந்தனையிலே உருவாக்கப் பட்ட " வாழ்வோரை வாழ்த்துவோம் " என்ற கலைஞர்களின் கௌரவிப்பு விழாவிலே "தாஜூல் உலூம் (பல்கலைவேந்தன்)
என்ற கௌரவிப்புப் பட்டம் இவருக்கு வழங்கப் பட்டது. அதனைத் தவிர கலாபூசணம் , கலைக் குரிசில், கலாகேசரி, போன்ற கௌரவ பெயர்களும் , விருதுகளும் இவருக்கு வந்து சேர்ந்தன. 

2016 ஆம் ஆண்டிலே உலகக் கவிஞர்கள் தினத்தையொட்டி தாமரைத் தடாகத்தில் இடம்பெற்ற பாராட்டு வைபவத்திலே இலங்கையின் புகழ் பூத்த முன்னணி கவிஞர்கள் ஐந்து பேரை தெரிவு செய்தது அதில் மூன்று சிங்கள மொழி கவிஞர்களும், இரண்டு தமிழ் மொழிக் கவிஞர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இதில் நமது கலைவாதியும் தேர்ந்தெடுக்கப் பட்டதோடு இவருக்கு " காவ்யாபிமானி " என்ற சிறப்புப் பட்டமும் வழங்கப் பட்டது. இந்த நிகழ்வு அந்த ஆண்டில் மாத்திரமே இடம்பெற்றது. எனவே "காவ்யாபிமானி " என்ற சிறப்புப் பட்டத்தை பெற்ற ஒரேயொரு முஸ்லிம் கவிஞர் இவரென்பது குறிப்பிடத் தக்க விடயமாகும். பல துறைகளிலும் ஆளுமையுள்ள கலைவாதி கலீல் அவர்கள் வானொலித் துறையிலும் ஈடுபட்டு அங்கும் பல அருமையான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். அந்த நிகழ்ச்சிகள் யாவும் அக்காலத்தில் ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகளாக வலம் வந்தன. 

அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய நிகழ்ச்சிகளாக இலக்கிய மஞ்சரி, சதுரச் சங்கமம், இலக்கியக் களஞ்சியம், நூல் உலா, கதை கேளீர் போன்ற சுவாரசியமான நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். 

இலங்கை ரூபவாஹினியில், அவர் நடாத்திய நேர்காணல் நிகழ்ச்சியான " பிறைக் கதம்பம் " அக்காலத்தில் வெகுவாகப் பேசப்பட்ட நிகழ்ச்சியாகும். 

இலங்கையில் நடக்கின்ற தமிழ் தின விழா, மீலாத் விழா போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், ஊடகக் கருத்தரங்குகளில் விரிவுரையாளராகவும், புத்தக வெளியீட்டு விழாக்களில் சிறந்த ஆய்வுரைகளை வழங்குபவராகவும். கலந்து தனது இலக்கிய பயணத்தைத் தொடர்ந்த வண்ணம் உள்ளார். நாட்டின் எந்த பகுதியில் இருந்து இவரை எந்த விழாவுக்கு அழைத்தாலும் சரியான நேரத்துக்கு அந்த இடத்தில் போய் சேரக் கூடியவராக இருக்கின்றார். இவரின் வயதோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இவரின் நடவடிக்கைகள் யாவும் விசித்திரமானதாகவே இருக்கின்றது. 

தற்போது நவமணிப் பத்திரிகையிலே உதவி ஆசிரியராக கடமைபுரியும் இவர் முகநூல் வட்டாரத்திலும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையிலே செயல் பட்டுக் கொண்டிருக்கின்றார். திக்குவல்லை ஸப்வான் அவர்களோடு இணைந்து இவர் எழுதும் இரட்டைப் புலவர்கள் என்ற கவிச்சமர் நிகழ்ச்சி முகநூலில் முக்கியமாகப் பேசப் படக் கூடிய நிகழ்ச்சியாக மாறி முகநூல் நண்பர் வட்டாரத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. 

பல எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு முகப்போவியம் வரைந்துள்ள கலைவாதி உண்மையில் பல்கலைவேந்தர் தான்.
இந்தத் துடிப்புள்ள கலைஞனை, மற்றவர்களுக்கும் கரம் கொடுத்து தூக்கி விட்ட அற்புதமான இலக்கிய வாதியைப் போன்றொரு உன்னதமான மனிதரை இந்த கலையுலகமே இழந்து விட்டுத் தவிக்கும் இந்த வேளையில் அவரின் நல்வாழ்வுக்காக பிரார்த்திப்போமாக. அவரின் கப்ருடைய வாழ்வு ஒளிமயமான இல்லறமாக அமையவும் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை அடையவும் இறையோனை வேண்டுவோம். அமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன். 

என்றும் அன்புடன் 
✍#கலைமணாளன்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.