ஒரு ஜீன்ஸ் பேண்டை வாரக்கணக்கில் துவைக்காமல் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் நீங்களும் ‘நோ வாஷ் இயக்கத்தில் ’ ஒருவர்!!

உங்கள் துணிகளை துவைப்பதற்கு நீங்கள் சோம்பலாக உணர்கிறீர்களா? ஒரு ஜீன்ஸ் பேண்டை வாரக்கணக்கில் துவைக்காமல் பயன்படுத்துகிறீர்களா? துணிகளில் அதிகமான அழுக்கோ, துர்நாற்றமோ வந்தால் மட்டும்தான் துவைப்பது குறித்து யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் ‘நோ வாஷ் இயக்கத்தில் ’ (No wash Movement) ஒருவர். இந்த கட்டுரை உங்களுக்கானது.உலகம் முழுவதும் தங்களது துணிகளை துவைக்க விரும்பாத அல்லது மிக அரிதாகவே துவைக்க விரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.துணிகளை குறைவாக துவைப்பதே நல்லது என்பதை வலியுறுத்தும் விதமாக மேற்கத்திய நாடுகளில் ‘No wash Club’ என்ற ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. துணிகளை துவைக்காமல் இருப்பது அல்லது அரிதாக துவைப்பது மட்டுமே அந்த துணிகளுக்கு நல்லது என இந்த ‘No wash Club’ கூறுகிறது.ஆனால் அது உண்மையா? துணிகளை துவைக்காமல் உபயோகிப்பதற்கு ‘நோ வாஷ் இயக்கத்தின்’ மக்கள் கூறும் காரணங்கள் என்ன?துவைக்காத ஜீன்ஸ் பேண்ட்டுக்கு ஆயுள் அதிகம்

ரியான் சாபோ அவரது குழுவும் பல மணி நேரங்கள் செலவு செய்து, அங்கே குவிந்து கிடந்த வெவ்வேறு ஜீன்ஸ் பேண்ட்களின் புகைப்படங்களை ஆய்வு செய்துகொண்டிருந்தனர். அவர்கள் அதில் எதை சிறந்த ஜீன்ஸ் பேண்டாக தேர்வு செய்யலாம் என விவாதித்து வந்தனர்.அது ‘இண்டிகோ இன்விடேஷனல்’ (Indigo Invitational) என்னும் போட்டி. போட்டியில் கலந்து கொள்பவர்கள் குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றி ஆண்டு முழுவதும் தங்களுடைய ஜீன்ஸை அணிய வேண்டும். இந்த விசித்திரமான போட்டியில் வெற்றி பெறுவதற்கு ஒரு யுக்தி உள்ளது. அதாவது அவர்கள் தங்களுடைய ஜீன்ஸை ஆண்டு முழுவதும் துவைக்க கூடாது. அப்படி செய்தால் அவர்களுடைய ஜீன்ஸ் புதிது போலவே இருக்கும்.தண்ணீருடனும், சோப்புடனும் சேரும்போது ’டெனிம்’ (Denim) தொய்வடைகிறது. எனவே அடர்நிற காண்ட்ராஸ்ட் நிறமுள்ள ஜீன்ஸ்களை துவைக்காமல் இருப்பதே நல்லது என நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த போட்டிகளில் கலந்துகொள்ளும் பெரும்பாலான மக்கள் இதை பின்பற்றுகிறார்கள்.2010ஆம் ஆண்டு தன்னுடைய முதல் ஜீன்ஸ் பேண்டை வாங்கியபோதுதான் ‘நோ வாஷ்’ முறையை தான் பின்பற்ற துவங்கியதாக கூறுகிறார் ரியான் சாபோ. கிட்டதட்ட 6 மாத காலம் வரை தான் அந்த ஜீன்ஸை துவைக்கவில்லை என்கிறார் சாபோ.”துவைக்காமல் ஜீன்ஸை அணிந்தது சற்று அருவருப்பாகத்தான் இருந்தது. அதில் மோசமான துர்நாற்றமும் அடிக்கும்” என பிபிசியிடம் கூறுகிறார் சாபோ.‘இண்டிகோ இன்விடேஷனல்’ போட்டியில் கலந்துகொள்ளும் பத்தில் ஒன்பது பேர் தங்களுடைய ஜீன்ஸ் பேண்ட்களை 150-200 தடவை வரை துவைக்காமல் பயன்படுத்துகின்றனர்.அதேபோல் வாஷிங் மெஷினை பயன்படுத்துவதற்கு பதிலாக, துவைக்கப்படாத துணிகளை பயன்படுத்துபவர்கள் தங்களது உடைகளை சூரிய ஒளியில் போட்டு காய வைத்து கொள்ளலாம் எனவும் அறிவுரை வழங்கப்படுகிறது. சூரியனில் இருந்து கிடைக்கும் புற ஊதா கதிர்கள் துணிகளில் இருக்கும் கிருமிகளை கொன்றுவிடும் என ஒரு சிலரால் நம்பப்படுகிறது.அதேபோல் துணிகளை துவைக்காமல் அணியும் குழுவில் ஜீன்ஸ் அணிபவர்கள் மட்டுமல்ல, அனைத்து விதமான துணிகளை அணிபவர்களும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.2019ஆம் ஆண்டு ஆடை வடிவமைப்பாளர் ஸ்டெல்லா மெக் கார்டினி தனது துணிகளை மிக அரிதாகவே துவைப்பதாக ஃபேஷன் உலகில் தலைப்பு செய்தியானார்.“நான் எனது பிராக்களை தினமும் துவைப்பதில்லை. நான் ஒரு துணியை அணிந்து விடுவதால் அது அழுக்காவதில்லை. நான் மிக சுத்தமாக இருக்கிறேன். எனவே அதை ஒவ்வொரு முறையும் துவைக்க தேவையில்லை. அதேபோல் dry cleaning போன்றவற்றிலும் எனக்கு விருப்பம் கிடையாது” என்று கூறுகிறார் ஸ்டெல்லா.துணிகளை துவைப்பதில் சிலருக்கு ஆர்வமோ, தேவையோ இல்லாமல் இருப்பதால் அவர்கள் ‘நோ வாஷ்’ முறையை பின்பற்றுகின்றனர். ஆனால் இன்னும் சிலருக்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அது சுற்றுச்சூழல் பாதுகாப்பு!ஆம். துணிகளை அடிக்கடி துவைப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். இன்னும் சிலர் வாஷிங் மெஷின் உபயோகிப்பதால் ’கரண்ட் பில்’ அதிகரிப்பு குறித்தும் சிந்திக்கின்றனர்.இந்த நிலையில், Wool & Prince என்னும் துணி நிறுவனம், தங்களது வுல்லன் துணிகளை 100 நாட்கள் வரை துவைக்காமல் அணிந்துகொள்ளலாம் என்ற சவாலை அறிமுகப்படுத்தி, தங்களது துணிகளை விளம்பரம் செய்தது.இந்த யுக்தி குறிப்பாக ஆண்களை வெகுவாக கவர்ந்ததாக அந்த துணி நிறுவனத்தின் நிறுவனர் மேக் பிஷாப் கூறுகிறார்.”ஆண்கள் பொதுவாக துணி துவைக்கும் விஷயங்களில் சற்று சோம்பல் ஆனவர்கள் என்பதால், அவர்கள் எங்களுடைய துணிகளை விரும்பினர்” என்று மேக் குறிப்பிடுகிறார்.Wool & Prince நிறுவனம் கூறுவது போல, வுல்லன் துணிகளை நீண்ட நாட்கள் வரை துவைக்காமல் அணிந்தாலும் எந்த பிரச்னையும் இருக்காது என்பதை உறுதிப்படுத்துகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த செல்சா ஹாரி.பிபிசியிடம் பேசிய அவர், “நாங்கள் பொதுவாகவே எங்களது துணிகளை அன்றாடம் துவைக்கும் பழக்கம் உடையவர்கள். அதுதான் சுகாதாரம் என்று நினைத்தேன்.ஒருமுறை ட்ரெக்கிங் செல்வது குறித்து மலையேறுதல் மற்றும் நடை பயிற்சிகளில் ஆர்வமுடைய என்னுடைய நண்பர்களிடம் பேசியபோது, ட்ரெக்கிங் செல்லும்போது வுல்லன் துணிகளை அணிவது பயனளிக்கும் என்று கூறினர். தொடர்ச்சியான நாட்களுக்கு அதனை அணிந்தாலும் அதிலிருந்து எந்தவொரு நாற்றமும் வராது என்று கூறினார்கள். நான் அதை முயற்சி செய்து பார்த்தேன். அது உண்மையாகவே வேலை செய்தது. அந்த துணிகளை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்த போதிலும் அதில் எந்தவொரு அசௌகரியங்களும் ஏற்படவில்லை.அதன்பின் எனக்கு ஒரு யோசனை எழுந்தது. நான் ஏன் இதை என் அன்றாட வாழ்விலும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று? அதற்கு பிறகு நான் உண்மையாகவே அந்த பழக்கத்தை பின்பற்ற துவங்கிவிட்டேன்” என்று கூறுகிறார் செல்சா ஹாரி.துணிகளில் வரும் நாற்றத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

பயணம் செய்யும் நாட்களில் தொடர்ச்சியாக துணிகளை அணியும்போது வரும் நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு சில வழிகளை தான் பின்பற்றுவதாக கூறுகிறார் செல்சா.தன்னுடைய அக்குள் பகுதிகளில் வினிகர் அல்லது வோட்காவை அடித்து கொள்வது, இரவு நேரங்களில் துணிகளை காற்றில் காயவிடுவது போன்ற முறைகளை அவர் பின்பற்றுகிறார். இது தனக்கு நல்ல பயனளிப்பதாக செல்சா கூறுகிறார்.தன்னுடைய உள்ளாடைகளை கூட அவர் இதே வழியில்தான் பராமரிக்கிறார்.இந்த சமயத்தில், யுனிவெர்சிட்டி ஆஃப் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசியராக இருக்கும் மார்க் சம்னர் கூறிய வரிகளை நாம் குறிப்பிடவேண்டும்.அது, “உங்கள் துணிகளுக்கு நீங்கள் செய்யக்கூடிய மோசமான விஷயம் என்றால், அது அந்த துணிகளை துவைப்பதுதான்”துணிகளை குறைவான முறை துவைப்பதே நல்லது என்று பல ஆடை வடிவமைப்பாளர்களும், பேஷன் ஆர்வலர்களும் அறிவுறுத்துகின்றனர்.”துணிகளை துவைப்பதால் இந்த உலகம் ஒன்றும் அழிந்துவிடப் போவதில்லை. ஆனால் குறைவாக செய்தால் எதையுமே ஒரு நிலைத்தன்மையுடன் வைத்திருக்கலாம்” என்று சம்னர் கூறுகிறார்.”ஆனால் அதேசமயம் எக்ஸிமா போன்ற தோல் நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கும், சுகாதாரத்தை பேணுவதற்கும் துணிகளை துவைப்பது அவசியம்தான். ஆனால் ஒரு துணியை அணியும் ஒவ்வொரு முறையும் அதை துவைக்க வேண்டிய அவசியம் கிடையாது.அதேபோல் துணிகள் அழுக்காகவோ, நாற்றத்துடனும் இருந்தால் அதற்காக வெட்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை” என்றும் சம்னர் குறிப்பிடுகிறார்.பெரும்பாலும் வாஷிங் மெஷினில் துணி துவைப்பவர்கள், ஒவ்வொரு விதமான மெட்டிரியல் துணிகளையும் தனித்தனியாக துவைக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் தான் அப்படியெல்லாம் எந்த வழிமுறைகளையும் பின்பற்றுவதில்லை என்று கூறுகிறார் அவர்.“நான் டெக்ஸ்டைல் தொழில் 30 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கிறேன். துணிகளை அதன் மெட்டீரியல்களை கொண்டு அடையாளம் காண்பது எனக்கு மிக எளிது. ஆனால் அவற்றையெல்லாம் நான் செய்வது இல்லை, அதற்கு நேரமும் இல்லை.என்னுடைய அனுபவத்தில் சொல்வதென்றால், உங்களுடைய துணியில் நாற்றம் அடிக்காத வரையில் நீங்கள் அதனை துவைக்க தேவையில்லை” என்று பிபிசியிடம் விவரிக்கிறார் சம்னர். BBC

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.