முஸ்லிம்கள் அதிகம் வாழும், பகுதியில் ஹிஜாப் அணிவதில் சிக்கலா..?காஷ்மீரின் ஶ்ரீநகரில் இருக்கும் ரெய்னாவாரி பகுதியில் `விஸ்வ பாரதி' என்ற பள்ளி இயங்கிவருகிறது. இங்கு ஹிஜாப் அணிந்துகொண்டு வந்த மாணவிகள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து இஸ்லாமிய மாணவர்கள் பள்ளிக்கு வெளியே போராட்டம் நடத்தினர். அதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய இஸ்லாமிய மாணவி ஒருவர், `` `ஹிஜாப் அணிந்துகொண்டு பள்ளிக்குள் நுழைய முடியாது' என்று கூறி, எங்களைப் பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. அதைத் தொடர்ந்து நாங்கள் வெளியே நின்று கேள்வி கேட்கத் தொடங்கினோம்.காவல்துறை மற்றும் ஊடகங்கள் வந்த பிறகு, இது ஒரு பிரச்னையாக மாறியதும், அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டனர்" எனத் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பள்ளி நிர்வாகம், ``பள்ளியின் ஆடை நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். பள்ளி எந்த மத நம்பிக்கைக்கும், ஹிஜாபுக்கும் எதிரானது அல்ல" என விளக்கம் தெரிவித்தது.இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி) தலைவர் மெகபூபா முஃப்தி, ``எதை அணிய வேண்டும், எதை அணியக் கூடாது என்பதை முடிவுசெய்வது எங்களுக்கு அரசியலைப்பு வழங்கிய தனிப்பட்ட உரிமை. எங்கள் மதத்துக்கு எதிரான எதையும் செய்யும்படி எங்களை வற்புறுத்த வேண்டாம். பள்ளி நிர்வாகத்தின் செயல், மதச் சுதந்திரத்தின்மீதான தாக்குதல். இதற்கு முன்பு கர்நாடகாவில் இது போன்ற சம்பவங்களைப் பார்த்தோம், இப்போது காஷ்மீரில் இது செயல்படுத்தப்படுவதைக் காண்கிறோம். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம், இந்தச் சம்பவத்துக்குக் கடுமையான எதிர்வினைகள் இருக்கும்.
இந்த நாட்டை கோட்சேவின் நாடாக மாற்ற விரும்புகிறார்கள். ஜம்மு-காஷ்மீர் அதற்கான ஆய்வகமாக மாறியிருக்கிறது. ஜம்மு - காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்துசெய்யப்பட்ட பிறகு சாதாரண நிலைதான் இருக்கிறது என்றால்... இருந்தால் தாவூதி, வீரி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் ஏன் துன்புறுத்தப்படுகிறார்கள்... என்.ஐ.ஏ மூத்த இஸ்லாமிய அறிஞர் ரஹ்மத்-உல்லாவை பாண்டிபோராவுக்கு வரவழைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்லாமிய அறிஞர்கள் ஏன் என்.ஐ.ஏ-வால் அழைக்கப்படுகிறார்கள்?" எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.