பழங்கால கலைப் பொருட்களை மீள ஒப்படைத்த அமெரிக்கா
இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 105 பழங்கால கலைப் பொருட்களை மீள ஒப்படைத்த அமெரிக்கா

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பழங்கால கலைப் பொருட்களை மீட்கும் நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. 

இந்த நிலையில், 105 பழங்கால கலைப்பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. 

அந்த பொருட்கள் நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகத்திடம் அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் பின்னர் கலைப் பொருட்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

அமெரிக்காவிற்கு கடத்தப்பட்ட 105 இந்திய பழங்கால பொருட்கள் திரும்ப வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தூதர் தரன்ஜித் சிங் தெரிவித்தார். 

அப்பொருட்கள் விரைவில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. 

கிழக்கு இந்தியாவில் இருந்து 47 கலைப்பொருட்களும் தென்னிந்தியாவில் இருந்து 27 பழங்கால பொருட்களும் மத்திய இந்தியாவில் இருந்து 22 கலைப்பொருட்களும் வட இந்தியாவில் இருந்து 6 பொருட்களும் மேற்கு இந்தியாவில் இருந்து 3 கலைப்பொருட்களும் அவற்றுள் அடங்கும். 

மீட்கப்பட்ட பழங்கால பொருட்கள் கி.பி. 2 முதல் 3 ஆம் நூற்றாண்டு மற்றும் கி.பி. 18-19 ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டங்களை சேர்ந்தவை ஆகும். 

அவை டெரகோட்டா, கல், உலோகம் மற்றும் மரத்தால் செய்யப்பட்டவை. சுமார் 50 கலைப்பொருட்கள் இந்து, ஜெயின் மற்றும் இஸ்லாம் மதத்துடன் தொடர்புடைவை என்றும் மீதம் கலாசாரத்தின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையிலானவை என்றும் தெரிவிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.