ஹம்தி என்ற 3 வயது சிறுவனுக்கு, லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் நடந்த மிகப்பெரும் அநியாயம்
பழுதடைந்த ஒரு சிறுநீரகத்தை அகற்ற ஆலோசனை கூறிய வைத்தியர்கள் இரண்டு சிறுநீரகத்தையும் அகற்றிவிட்டு தவறுதலாக நடந்ததாக கூறுவதன் பின்னணி என்ன...?
அப்படியென்றால் தவறுதலாக அகற்றப்பட்ட சிறுவனின் சிறுநீரகம் எங்கே....?
சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் தற்போது நாட்டை விட்டும் வெளியேற்றம்.
சிறுவன் முஹம்மது ஹம்திக்கு ஒரு வயது முதல் சிறுநீர் கழிப்பதில் ஏற்பட்ட சில அசௌகரியங்கள் காரணமாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் வைத்தியர் மலிக் சமரசிங்க வின் ward ல் சில காலம் சிகிச்சை பெற்று வந்தான்.
இவனுடைய சிறுநீரகம் ஒன்று பழுதடைந்து விட்டதாகவும் தொடர்ந்தும் சிகிச்சையளிப்பதில் பல்வேறு அசௌகரியங்களுக்கும் உபாதைகளுக்கும் முகம் கொடுக்க நேரிடும் என்றும் வைத்தியர்கள் கூறியிருக்கின்றனர்.
சிறுவனுடைய மற்ற சிறுநீரகம் சிறப்பாக இயங்குவதால் பழுதடைந்த சிறுநீரகத்தை அகற்றிவிடுவதே சிறந்தது என்று வைத்தியர்களால் சிறுவனின் பெற்றோருக்கு ஆலோசனையும் கூறப்பட்டுள்ளது.
உலகத்தில் ஒரு சிறுநீரகத்தோடு நிறைய பேர் வாழ்கிறார்கள் ஆகவே பயப்பட வேண்டிய அவசியமில்லை என்ற வைத்தியர்களின் உபதேசத்தால் ஆறுதலடைந்த பெற்றோர் தொடர்ந்தும் தமது பிள்ளை படும் அவஸ்தையை பார்த்துக் கொண்டிருக்க முடியாத காரணத்தால் வைத்தியர்களின் இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டு சிறுவனின் பழுதடைந்த சிறுநீரகத்தை அகற்றி விட சம்மதம் தெரிவித்தனர்.
அதற்கேற்ப கடந்த வருடம் (2022.12.24) டிசம்பர் மாதம் கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் வைத்தியர் நவீன் விஜேகோன் அவர்களால் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அந்த சத்திர சிகிச்சைக்கு பிறகு தான் இவர்களுடைய வாழ்க்கையில் மிகப் பயங்கரமான சம்பவமே நிகழ்கிறது.
ஆம்.... சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சுமார் மூன்று நாட்களாகியும் குழந்தை சிறுநீர் கழிக்கவில்லை உடல் முழுதும் வீங்கி கிடக்கின்றது.
மீண்டும் வைத்தியர்களால் ஸ்கேன் செய்யப்பட்டு குழந்தை பரிசோதிக்கப்படுகிறது அப்பொழுது அந்த வைத்தியர்கள் சொன்ன செய்தி தான் இந்த பெற்றோருடைய தலையில் பேரிடியாய் விழுகிறது.
அதாவது தங்கள் கைககளால் தவறுதலாக சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டு விட்டது என்று கூறியதுடன், இது எதிர்பாராத விதமாக நடந்த ஒரு மிகப்பெரிய தவறு என்பதையும் வைத்தியர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் சொன்ன அந்த தகவலை தனது கைத்தொலை பேசி மூலம் வீடியோ பதிவு செய்ய முற்பட்டபோது இந்த செய்திகளை வெளியில் சொல்லி பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று மிகவும் வினயமாகவும் தாழ்மையுடனும் வைத்தியர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த சிறுவனுக்கு பொருந்தக் கூடிய இன்னொரு சிறுநீரகத்தை தேடி மீண்டும் ஒரு சத்திர சிகிச்சை செய்து சிறுவனை பழைய நிலைக்கு கொண்டு வர தங்களால் முடியும் என்றும் அதற்காக முடிந்த உதவிகள் அத்தனையையும் செய்வதாகவும் வைத்தியர்களால் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.
வைத்தியர்களைப் பகைத்துக் கொண்டால், தன் சின்ன மகனின் நிலைமை இதைவிட மோசமாகுமோ என்ற பயத்தினாலும், பதட்டத்தினாலும் செய்வதறியாது திகைத்துப்போன போன பெற்றோர் வேறு வழியின்றி வைத்தியர்கள் கூறிய அந்த வார்த்தைகளை நம்பி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சிறுநீரகம் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அது சாத்தியமாக அனைவரும் பிரார்த்திப்போம்.
சிறுவனுக்கு நடந்த இந்த அநீதியை தட்டிக் க்கேட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்க அவர்களுக்கு நேரமுமில்லை பொருளாதார வசதியுமில்லை. சாதாரணமாக சிறிய அளவில் தொழில் செய்யும் இந்த தந்தைக்கு உதவ முடியுமானவர்கள் எந்த வகையிலாவது உதவுங்கள்.
குழந்தையின் தாயாருடைய காலம் மருத்துவ மனையிலேயே கழிகிறது.
ஆறுதலாய் உதவிக்கொண்டிருந்த சிறுவனின் பாட்டியும், அண்மையில் அகால மரணமெய்தினார்.
நோயாளி மகனுடன் இன்னும் மூன்று பிள்ளைகளை பராமரிக்கவும், அவர்களது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியாமல் திண்டாடிக் கொணடிருக்கிறார்கள்.
வைத்தியர்களின் கவனயீனத்தால் சிறுவன் ஹம்திக்கு நடந்த இந்த அசாதாரணத்திற்கு எதிராக, சட்ட ரீதியாக, பொருளாதார ரீதியாக இன்னும் எப்படியெல்லாம் உதவ முடியுமோ உதவுங்கள்.
தந்தையின் தொலைபேசி : 0776906516
Mohamed Nizar Mohmed Fazlim
a/c no 308200123292662
peoples Bank
kotahena
தயவுசெய்து ஏதோ ஒரு வகையில் உதவ முடியுமானவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும்.
சிறுவனின் தந்தை முஹம்மது பஸ்லிமின் சம்பூர்ண அனுமதியுடனும் அவர் தந்த தகவல்களின் அடிப்படையிலும் இந்தக்கட்டுரை எழுதப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக