6 மாதங்களின் பின்னர் மீண்டும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யத் தீர்மானம்!


அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப் குழு) இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் வெளிக்கொணரப்பட்டமையால் குறித்த முறைகேடுகளை சீர்செய்து நிறுவனத்தை முன்னேற்ற முடிந்திருப்பதாக நிதி அமைச்சின் உதவிச் செயலாளர், கோப் குழுவுக்குப் பாராட்டைத் தெரிவித்தார்.

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் கடந்த 2023 மார்ச் 07ஆம் திகதி இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மதிப்பாய்வு செய்யும் நோக்கில் குறித்த குழு அண்மையில் (04) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் கூடியபோதே இவ்வாறு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

கோப் குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை பரிசீலித்ததாகவும், இதுவரையில் நிறுவனம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

• பணியாளர்களை இணைத்துக் கொள்தை ஒழுங்குமுறைப்படுத்தல்

பணியாட் தொகுதிக்கு ஆட்களை இணைத்துக் கொள்வதை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பில் திறைசேரியின் பிரதிச் செயலாளர் தெரிவிக்கையில், கோப் குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அமைய நிறுவனத்தின் பணியாட் தொகுதியில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், பணியாளர்களை இணைத்துக் கொள்வதற்கு முகாமைத்துவ சேவையின் வழிகாட்டலைப் பின்பற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

• வருடாந்த அறிக்கைகள் மற்றும் கூட்டுத் திட்டத்தை சமர்ப்பித்தல்

நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதைத் துரிதப்படுத்துவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்நிறுவனத்தின் கூட்டுத் திட்டம் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், பொதுத்துறை நிறுவனங்கள் திணைக்களத்தின் இணக்கப்பாட்டுக்கு அமைய இதனை செயற்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

• கூட்டுத் திட்டத்தின் வணிக நோக்கங்கள்

தற்போது நடைமுறையில் உள்ள கூட்டுத் திட்டத்தில் உள்ள வணிக நோக்கங்களை அடைவதற்கான உத்திகள் குறித்து கோப் குழுவின் தலைவர் கேட்டறிந்தார். நிறுவனத்தின் வணிக நோக்கங்களை அடைவதற்கான மூலோபாயத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

• முறைகேடுகள் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகள்

நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பில் குழுவின் பரிந்துரைக்கு அமைய முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு இடைக்கால அறிக்கை கோப் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நிறுவனத்தில் நடந்த பல முறைகேடுகளுக்கு காரணமான பொதுமுகாமையாளர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

ஆய்வு அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த அதிகாரிகள், 2006ம் ஆண்டு முதல் பணிபுரியும் தற்போதைய பொது முகாமையாளரின் நடவடிக்கையால், பல நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி, முறைகேடான ஆட்சேர்ப்பு, ஆவணங்கள் பதிவு நடைமுறைப்படுத்தாமை, அதிகாரிகளுக்கான கடமைப் பட்டியல்கள், அதிகாரிகளை சமமற்ற முறையில் நடத்துதல், நிறுவனத்தின் நலனைத் துண்டித்தல், நிறுவனத்தின் செயல்பாடுகளில் தொடர்ச்சியான குறைவு உள்ளிட்ட பல முறைகேடுகளை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டனர்.

இங்கு நடத்தப்பட்ட விசாரணை போதுமானதாக இல்லாததால், நிறுவனத்தில் நடந்துள்ள கொடுக்கல் வாங்கல்கள் குறித்து தடயவியல் கணக்காய்வு அல்லது ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோப் குழு உறுப்பினர்கள் அறிவுறுத்தினர். இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனமானது 06 மாதங்களின் பின்னர் நிறுவனத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக மீண்டும் அழைக்கப்படும் எனவும் தலைவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, நிறுவனத்தின் சில கோப்புகள் காணாமல் போனமை மற்றும் பழைய டிஜிட்டல் தரவுகள் நீக்கப்பட்டமை தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோப் குழுவின் உறுப்பினர்கள், இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத் தாபனத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரான் விக்ரமரத்ன, ஜகத் குமார சுமித்ராரச்சி, (சட்டத்தரணி) மதுர விதானகே மற்றும் ராஜிகா விக்ரமசிங்ஹ மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.