⏩ அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அதிகாரத்தைக் கிராமியக் குழுக்களுக்கு வழங்குவதற்கு அமைச்சர் பிரசன்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது...

⏩ குறித்த தீர்மானத்தை சுற்றறிக்கை மூலம் அறிவிக்குமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது...

⏩ சில சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் பெயரில் கடன் பெற்றுள்ளனர்...

⏩ அஸ்வெசும தொடர்பில் மக்களை தவறாக வழிநடத்தும் நபர்களை தேடும் போலீஸ் உளவுத்துறை...

⏩ அரச அதிகாரிகள் ஒருங்கிணைப்புக் குழுக்களிடம் வந்து தங்களைக் காப்பாற்றும் பதில்களைக் கூற வேண்டாம்...

⏩ மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில், "எமது பாடசாலை - எமது கைகளால் காப்பாற்றுவோம்" செயற்திட்டம் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் பாடசாலை விடுமுறையின் போது ஆரம்பிக்கப்படும்...

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அதிகாரம் கிராமிய குழுக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த பிரேரணை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்தை செலுத்தி ஏனைய மாவட்டங்களிலும் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் அங்கு குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது:

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புள்ளி வழங்கும்   முறை குறித்து  அமைச்சு மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி   முறைமை ஒன்றைச் செய்யுங்கள். புள்ளி வழங்மும் வழங்கும் முறை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, 20 சதவீதம் பேர் மட்டுமே முறைப்பாடு அளித்திருக்கின்றனர். நான் புரிந்து கொண்ட வரையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுதான் நிலை. மேலும், மேல்முறையீடுகளை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசத்தையும் பிரதமர் நீடித்திருக்கிறார். கிராமத்தில் உள்ளவர்கள் ஒரு அமைப்பில் இருந்து  இவற்றைச் செய்வது கடினம். எனவே, சில இடங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தலையீட்டில் இத்திட்டம் செய்யப்படுகிறது. ஆனால் மக்கள் அலைகிறார்கள்.

இந்த விவகாரத்தை கையாளும் பொறுப்பு மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்களுக்கு பொறுப்புக்களை வழங்கினர். மேல்முறையீடுகளை விசாரிக்கும் அதிகாரத்தை கிராமக் குழுக்களுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை கிராமக் குழுக்களிடம் ஒப்படைப்போம். அந்த பிரேரணையை அமைச்சிடம் ஒப்படைப்போம். அதனை சுற்றறிக்கை மூலம் அறிவிக்க வேண்டும். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.

அரசின் வேலைத்திட்டத்தை அதிகாரிகள் நாசப்படுத்த அனுமதிக்க முடியாது. மக்களைத் தூண்டிவிட்டு வீதியில் தள்ளுவது அதிகாரிகள்தான். இல்லாவிட்டால் அத்தியாவசிய சேவையை வழங்குவதா இல்லையா என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும்.

இந்த வேலைத்திட்டத்துக்கு சமுர்த்தி அதிகாரிகள் முதல் முறையாக வரவில்லை. அப்போது நாங்களும் அவர்களுக்கு ஆதரவாக நின்றோம். சமுர்த்தி பெறுபவர்களில் 30-40 சதவீதம் பேர் தகுதியற்றவர்கள் என்றும் IMF கூறுகிறது. அதையே நாங்களும் சொல்கிறோம். அதை சரி செய்ய வேண்டும். சில சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகளின் பெயரில் கடன் பெற்றுள்ளனர். மக்களை குழப்பி போராட்டம் நடத்துபவர்கள் அவர்கள்தான்.  இது தோல்வி என்று காட்ட விரும்புகிறார்கள். அமைப்பு மாற்றம் அதுவல்ல. இந்தத் திட்டத்தை கிராமக் குழுக்களுக்கு ஒப்படைக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன்.
அஸ்வசும நலன்புரித்திட்டம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஒரு பிரதேச செயலகப் பிரிவில் எதிர்ப்புகள், முறையீடுகள் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். எதிர்ப்புகளின் எண்ணிக்கையை நூற்றுக்கு  ஐந்து சதவீதத்திற்கு கொண்டு வர முடிந்தால், மக்கள் திருப்தி அடைந்துள்ளனர் என்று நினைக்கலாம்.

இது குறித்து பிரதேச  செயலாளர்கள் கிராம மட்டத்தில் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். சிலர் திட்டமிட்ட பொய்களைக் கூறி மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் மக்களை வீதிக்கு கொண்டுவருவதற்கான வழிகளைத் தேடுகின்றனர். இவர்களை பொலீஸ்  உளவுத்துறையும் தேட வேண்டும்.

தொழிற்சங்கங்கள் செய்யும் செயல்களுக்கு அரசைக் குறை கூறாதீர்கள். நாங்கள் எங்கள் மாவட்டத்திற்கு குறிப்பிட்ட திட்டங்களை முன்வைப்போம்.

அரச அதிகாரிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு வரும்போது, ​​சரியான தகவல்களுடன் வாருங்கள். திட்ட அறிக்கைகளை அதிகாரிகளுக்கு அனுப்பியும் பயனில்லை. அதன் பிறகு என்ன நடந்தது என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள். ஒருங்கிணைப்பு குழுவிற்கு வந்து உங்களை காப்பாற்ற பதில் சொல்லாதீர்கள். நேரத்தை வீணடிப்பது குற்றம்.

அத்துடன், வெற்றுக் காணிகளை அப்புறப்படுத்தும் புதிய முறை கண்டுபிடிக்கும் வரை அதனை நிறுத்துவது குறித்தும் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. உரிமைப் பத்திரம்  இன்றி நீண்டகாலமாக காணியில் வாழ்பவர்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்குவது ஜனாதிபதியின் எண்ணக்கருவாகும். எனவே அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

பெரிய அளவிலான காணிகள் மற்றும் வணிக மதிப்புள்ள காணிகளுக்கு மட்டும் காணி உறுதிப் பத்திரம் கொடுக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. எனவே சாதாரண மக்களுக்கு காணி உறுதிப் பத்திரம் கொடுப்பதை நிறுத்த வேண்டாம். சிறிய காணிகளுக்கு உறுதிப்  பத்திரம் வழங்கும் போது பிரச்சினைகள் இருப்பின் அதற்கான ஆவணத்தை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி அனுமதி பெறுங்கள்.

மேல்மாகாண பாடசாலைகளில் “எங்கள் பாடசாலை – எமது கரங்களால் காப்பாற்றுவோம் " எனும் செயற்திட்டம் ஆகஸ்ட் மற்றும்  டிசம்பர் பாடசாலை விடுமுறையில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், ஆளுநரோடு கந்துரையாடி, நேரடித் திட்டங்களுக்கு நிதியை ஒதுக்காமல், பொதுத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். ஏனென்றால் எங்களிடம் குறைந்த அளவு பணம் உள்ளது. தொழிற்பயிற்சி, பெண்களுக்கான திட்டங்கள், அறநெறிப் பாடசாலை போன்றவைகளும்  அபிவிருத்தித்  திட்டங்கள் செய்யப்பட வேண்டும். அதற்காக, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து ஒரு திட்டத்தை உருவாக்குங்கள். இத்திட்டங்களைச் செயல்படுத்தும்போது சமூகத்தை முடிந்தவரை பங்கேற்கச் செய்யுங்கள். கம்பஹா மாவட்டத்தில் நாம் ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்தால் அது மற்றவர்களுக்கு பதிலாக அமையும்.

பாடசாலை அபிவிருத்தி பற்றிய முடிவுகள் கல்வி கட்டமைப்புக் குழுக்களில் கலந்துரையாடப்பட்டு முடிவு செய்யப்பட வேண்டும். அதிபர்களுடன் முன்கூட்டியே கலந்துரையாடி, பிராந்தியத்தின் கல்வித் திட்டத்தைத் தயாரிக்கவும். அந்தத் திட்டத்தை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் விவாதித்து ஒப்புதல் அளிப்போம். அந்த முடிவை ஆளுநரிடம் தெரிவிப்போம்.

பாடசாலைக் கட்டிடங்களின் மேற்கூரைகளை சீரமைப்பது குறித்த விவரங்களை அதிபர்களிடம் கேட்டால், அனைத்து கட்டிடங்களின் விவரங்களையும் அனுப்பி வைக்கின்றனர். சில பாடசாலைகளில் குழந்தைகள் இல்லை. இப்படி பொய்க்கு செலவு செய்வதில் அர்த்தமில்லை. தேவையான கட்டிடங்களை மட்டும் சரி செய்வோம். நான் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் திட்டமிடுபவர்களை பாடசாலைகளுடன் தொடர்புபடுத்தியுள்ளேன். திட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை தரும்படி கூறியுள்ளேன்.

அத்துடன், ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் முடிக்கப்படாத அனைத்து வீதிகளையும் பூர்த்தி செய்தல் தொடர்பான அறிக்கையை வழங்கவும். நட்பின் அடிப்படையில் வீதிகள் அமைக்க வேண்டாம். திட்டமிட்டு செயல்பட்டால் ஒவ்வொரு தொகுதியிலும்  வீதிகளை அமைக்கலாம்.

மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் த எயாபோஸ் ரொஷான் குணதிலக்க, கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் விதான, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மிலான் ஜயதிலக்க, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கம்பஹா மாவட்டச் செயலாளர் சமன் தர்ஷன பாடிகோரள, பிரதேச செயலாளர்கள், பொலிஸ் நிலையத் தளபதிகள், பாதுகாப்பு அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


முனீரா அபூபக்கர

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.