பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை ஒழிப்பதற்கும் மாணவர்கள் முன்னுதாரணமாக செயற்படவேண்டும் - கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் தவிசாளர் பி.மதனவாசன் தெரிவிப்பு

பசுமை வகுப்பறை திறந்து வைப்பு!
Opening of the Green Classroom

பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையிலிருந்து முற்றாக விடுபடவும், அதனை ஒழிப்பதற்கும் மாணவர்களாகிய நீங்கள் முன்னுதாரணமாக நின்று செயற்படவேண்டுமென கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் தவிசாளர் பி.மதனவாசன் தெரிவித்தார். 

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, சாஹிரா கல்லூரி மற்றும் சிங்கள மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் முதல் பசுமை வகுப்பறை ஒழுங்கமைக்கப்பட்டு கையளித்து வைக்கும் நிகழ்வு நேற்று (10) இடம்பெற்றது.  

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை தவிசாளர் பி.மதனவாசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, குறித்த பாடசாலையில் ஒழுங்கமைக்கப்பட்ட பசுமை முன்மாதிரி வாகுப்புக்களைத் திறந்து மாணவர்களிடம் கையளித்து வைத்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பசுமை வகுப்பறை நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்ட கற்றல் சூழலாகும்.  இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிளாஸ்டிக் பாவனையை கட்டுப்படுத்தல் மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கும் ஒரு இடமாகவும் இருக்கின்றது. 

இதனூடாக சுற்றுச்சூழலை மதிக்கும் வகையில் எவ்வாறு வாழவேண்டும் மற்றும் கற்றுக்கொள்வது என்பது குறித்து மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் வகுப்பறை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களாகிய நீங்கள் இவ்வாறு செயற்படுவதன் மூலம் திருகோணமலை நகர் மட்டுமல்ல எமது மாவட்டம், மாகாணம், நாடு ஒரு முன்னேற்றப் பாதையை நோக்கிப் பயணிக்கும் என கிழக்கு மாகாண சுற்றுலா துறையின் தவிசாளர் பி.மதனவாசன் மேலும் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் ரீ.ரவி, லயோலா சுற்றுச்சூழல் மற்றும் நீதி மையத்தின் பணிப்பாளர் Rev.Dr. Thierry J.Robouam, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், வன்னி ஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரி.முஹம்மட் பாரிஸ், Trinco Aid பணிப்பாளர் தயாளினி ஹரிஹரன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இத்திட்டம் வன்னி ஹோப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் நிதி பங்களிப்போடு Trinco Aid நிறுவனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு செயற்படுத்தபட்டு வருவதுடன்,  பாடசாலைகளில் பசுமை வகுப்பறை அமைப்பது பற்றியும், பசுமை வளாகங்கள் அமைப்பது தொடர்பாகவும், பாடசாலை மாணவர்களைக் கொண்டு சிறந்த செயல்திட்டங்களை எதிர்வரும் காலங்களில் செயல்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

(அபு அலா)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.