நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுமின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்துள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே கட்டண உயர்வு இடம் பெறும். உத்தேச திட்டம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிரணிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று (18) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

சபாநாயகர் அறிவிப்பு உட்பட ஆரம்பக் கட்ட பணிகள் முடிவடைந்த பின்னர் வாய்மூல விடைக்கான கேள்விச் சுற்று ஆரம்பமானது.

இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானால் நீர் கட்டணம் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இந்த கேள்வியை எழுப்பியமை தொடர்பில் முதலில் நன்றிகளை கூறிக்கொள்கின்றேன். நீர் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்துவம் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் தெளிவு படுத்தியிருந்தேன்.

மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரிக்கப் பட்டுள்ளதால், நீர்வழங்கல் துறையை நிர்வகிப்பதற்கு 425 மில்லியன் ரூபா செலவு ஏற்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக 2 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா கடனும் செலுத்தப்படுகின்றது. இதுவரை காலமும் முறையான நடவடிக்கை இடம் பெறாமை இதற்கு காரணமாகும்.

அதனை சீர் செய்வதற்கான நடவடிக்கையாகவே இது இடம் பெறுகின்றது.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே நீர் கட்டணம் உயர்த்தப்படும். பாராளுமன்றத்தில் நாளை (19) ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதன் போது இது பற்றி தெளிவுபடுத்தப்படும்.

ஒரு குடும்பத்தில் ஐவர் இருந்தால் 15 முதல் 20 அலகுகள் தான் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கும், சமுர்த்தி பயனாளிகளுக்கும் நீர் கட்டண உயர்வால் தாக்கம் ஏற்படாது.

நீர் கட்டண அதிகரிப்பு யோசனை எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டும் என்ற நோக்கம் எமக்கு இல்லை.

நீர் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் அண்மையில் கூட்டமொன்றை நடத்தியிருந்தேன். இதில் எதிரணியினர் பங்கேற்கவில்லை. அன்று இல்லாத அக்கறை இன்று திடீரென ஏன் வந்துள்ளன? தூங்குபவரை எழுப்பலாம். தூங்குபவர் போல் நடிப்பவரை எழுப்ப முடியாது, என்றார்.

இதேவேளை, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்த யோசனைக்கே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.