மருந்து ஒவ்வாமையால் கேகாலை வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழப்பு

நுண்ணுயிர் கொல்லி மருந்தொன்று வழங்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மரணத்திற்கான காரணங்களில் குறித்த நுண்ணுயிர் கொல்லி மருந்தும் அடங்குவதாக நேற்று(19) மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக கேகாலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் மிஹிரி பிரியாங்கனீ தெரிவித்துள்ளார். 

குறித்த நுண்ணுயிர் கொல்லி மருந்து இதற்கு முன்னதாக 13 தடவைகள் நோயாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

14ஆவது தடவையாக குறித்த மருந்தை வழங்கிய பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

கேகாலையைச் சேர்ந்த 57 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சிரோசீஸ் நிலைமை காரணமாக கடந்த 10ஆம் திகதி அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி அவருக்கு கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம்(18) உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக கேகாலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் மிஹிரி பிரியாங்கனீ தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.