தரிந்து உடுவரகெதர அவசர விபத்துகள் பிரிவில் அனுமதி
கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துகள் பிரிவில் அனுமதி
கைது செய்யப்பட்ட இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் தரிந்து உடுவரகெதர கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத கூட்டமொன்றின் அங்கத்தவராக செயற்பட்டமை, அரச ஊழியருக்கு குற்றவியல் அழுத்தம் விடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நேற்று (28) அவர் கைது செய்யப்பட்டார்.
தரிந்து உடுவரகெதர கைது செய்யப்படுகின்ற சந்தர்ப்பத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
தேசிய கடன் மறுசீரமைப்பு என்ற போர்வையில் ஊழியர் சேமலாப நிதியத்தை கொள்ளையிடுதல், அரச ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்காமை, ஓய்வூதியத்தில் கை வைத்தல் மற்றும் அநீதியான தொழில் சட்ட மறுசீரமைப்பிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், அங்கு வருகை தந்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவை வாசித்து ஆர்ப்பாட்டத்திற்கு வரையறைகள் உள்ளதாக சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் பொரளை சந்திக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவின் நலன் தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றிரவு பொரளை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக