நான் இந்தத் துறை சார்ந்தவனல்ல. இத்துறையின் ஆழ அகலங்கள் பற்றியும் நுணுக்கங்கள் குறித்தும் எனக்குத் தெரியாது. ஆனால், எனக்கு சில அவதானங்கள் உண்டு. அவற்றை வைத்தே இதனை எழுதுகிறேன்.
மருத்துவத் துறையில்...
- திறமையானவர்களின் வெளியேற்றம்
- மருந்துத் தட்டுப்பாடு
- தரமற்ற மருந்து இறக்குமதி
- வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு
- போதிய சம்பளம் இன்மை
- வெளித் தலையீடுகள்
- வெளிநாட்டு மருத்துவர்களின் நுழைவு
போன்ற காரணங்கள் மருத்துவத்துறையில் சில நெருக்கடிகளை உருவாக்கி இருப்பதாக உணர்கிறேன்.
தடுப்பூசிகள் உயிர்களை காவுவதும், காய்ச்சலுக்கு கொடுத்த மருந்து கண் பார்வையைப் பறிப்பதும், இரு கிட்னிகளை அகற்றுவதும், தேவையற்றவைகளை உள்ளே வைத்துத் தைப்பதும், சுகப் பிரசவங்களை தடுப்பதும், மருந்தில் குணப்படுத்த முடியுமானதை சத்திரசிகிச்சைக்கு தள்ளுவதும் என அண்மைக்கால நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை செய்திகள். நாம் ஊடகங்களில் பார்த்த, கேட்ட செய்திகள்.
இது சமூகமட்டத்தில் ஒரு பீதியை உருவாக்கி இருப்பதை கடந்த இரண்டு நாட்களாக நான் உணர்கிறேன். நான் கதைத்த பலரும் கைமருத்துவம் செய்த படி, தெரிந்த வைத்தியர்களுடன் கதைத்த படி வைத்தியசாலைகளுக்கு செல்லாமல் நோயோடு இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் ஒரு பீதி நிலவுவதை அவதானிக்கிறேன். "கேக்கிற செய்திகள கேட்டா பயமா இருக்கு" என்பதே பதிலாக இருக்கிறது. இது குறித்து வைத்தியர்களும் வைத்திய சங்கமும் நம்பிக்கை தரும்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வது காலக் கட்டாயமாகும்.
போஃபியாவை ஏற்படுத்தி மாஃபியா நடப்பது போன்றும், மாஃபியா நடப்பதாக போஃபியா ஏற்பட்டிருப்பது போன்றும் தோன்றுகிறது. சரியோ பிழையோ துறையில் உள்ளவர்களே மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்.
இஸ்பஹான் சாப்தீன்
2023.08.18
கருத்துகள்
கருத்துரையிடுக