போதைப்பொருளுக்கு அடிமையான மாணவர்களை மனநல மருத்துவ மனைகளுக்கு அனுப்பவும் - அமைச்சர் பிரசன்ன

➡️ பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் வருகை தராத அரச அதிகாரிகள் தொடர்பில் மாவட்ட செயலாளர் ஊடாக ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிக்கை அனுப்புமாறு கம்பஹா பிரதேச செயலாளருக்கு அமைச்சர் பிரசன்ன பணிப்புரை...
➡️ மாகாண சபை அல்லது மத்திய அரசாங்கத்தினால் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் ஒருங்கிணைப்புக் குழுக்களிடம்  அனுமதியைப் பெறவும்...
➡️ கம்பஹா பிரதேச செயலகப் பிரிவில் நடைபெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும்...
➡️ போதைப்பொருளுக்கு அடிமையான மாணவர்களை மனநல மருத்துவ மனைகளுக்கு அனுப்பவும்...
                                               - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க


பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் வருகை தராத அரச அதிகாரிகள் தொடர்பில் மாவட்ட செயலாளர் ஊடாக ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிக்கை அனுப்புமாறு கம்பஹா பிரதேச செயலாளர் சுரங்கா குணதிலக்கவிற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார்.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அவதானம் செலுத்தி வருவதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

எனவே, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு அரச அதிகாரிகள் வராத நிலையில் பிரதேச செயலகம் மற்றும் மாவட்டத்தின் அபிவிருத்திக்கான தீர்மானங்களை எடுப்பது சிரமமாக இருக்கும்.

கம்பஹா மாவட்டச் செயலகத்தில் நேற்று (15) நடைபெற்ற கம்பஹா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது:

மாகாண சபை அல்லது மத்திய அரசாங்கத்தினால் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன், ஒருங்கிணைப்புக் குழுக்களிடம் அனுமதியைப் பெறவும். அப்போது அந்தந்தப் பிரிவுகளின் கிராமக் குழுக்களுக்குத் தெரிவிக்க முடியும் அந்தக் குழுக்களிடம் இருந்து கிடைக்கும் பதில்களின்படி, குறைபாடுகளை தவிர்த்து திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.

எனவே, ஒருங்கிணைப்புக் குழுக்களின் அனுமதியின்றி அதிகாரிகளின் விருப்பப்படி திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்க முடியாது. இதுபோன்ற திட்டங்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அப்போது அதிகாரிகளைக் குறை சொல்ல மாட்டார்கள் அரசியல்வாதிகளான எங்களைத்தான் குறை சொல்வார்கள்.

அரசு நிறுவனங்களில் நிரந்தர வைப்புத்தொகை வைப்பது தேவையற்றது என்று கணக்காய்வகம் கூறுகிறது. அது மக்களின் பணம். எனவே, அனர்த்த காலங்களில் பயன்படுத்துவதற்கு கொஞ்சம் பணத்தை வைத்துக் கொண்டு, மிகுதிப் பணத்தை அபிவிருத்தித் திட்டங்களுக்குச் செலவிட வேண்டும், ஏனென்றால் மக்கள் பணத்தை மக்கள் நலனுக்காகச் செலவிட வேண்டும்.

அதற்கமைவாக கம்பஹா பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டுமென தெரிவித்த அமைச்சர், அதற்குத் தேவையான நிதியை மாகாண ஆளுநர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

பாடசாலைகள் மற்றும் அது தொடர்பான பிரதேசங்களில் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதற்காக நிறுவப்பட்ட கண்காணிப்புக் குழுக்கள் கம்பஹா பிரதேச செயலகப் பிரிவில் முறையாகச் செயற்படுவதில்லை எனத் தெரியவந்துள்ளது.

பல பாடசாலைகளில் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும் சில மாணவர்கள் அவற்றிற்கு அடிமையாகியுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

அதிபர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்புப் பிரிவினரை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுக்களை நிறுவுவது வலயக் கல்விப் பணிப்பாளரின் பொறுப்பாகும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கிராமிய மட்டத்தில் பரவும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு கண்காணிப்புக் குழுக்கள் சிறந்த சேவையை வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பல்வேறு போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களை எச்சரித்து, அவர்களை மனநல மருத்துவ மனைகளுக்கு அனுப்புமாறும் அமைச்சர் பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதன் பின்னர், அதிபர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அந்த மாணவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந் நிகழ்வில் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப், கம்பஹா மாவட்ட செயலாளர் சமன் தர்ஷன பாடிகோரல, மேல் மாகாண சபைத் தலைவர் சுனில் விஜேரத்ன, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் குணவர்தன, கம்பஹா பிரதேச செயலாளர் சுரங்கா குணதிலக, பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

கருத்துகள்