▪️சுற்றுலா இணையத்தளமான பிக் செவன் ட்ராவல் (Big Seven Travel) இணையத்தளம் சுற்றுலா மேற்கொள்வதற்கான உலகின் சிறந்த தீவுகளில் ஒன்றாக இலங்கையை பெயரிட்டுள்ளது.
▪️2023ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வாய்ப்புகளை கருத்திற்கொண்டு இந்த தரப்படுத்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
▪️இதன்படி, 2023ஆம் ஆண்டில் சுற்றுலா மேற்கொள்வதற்கான உலகின் சிறந்த 50 தீவுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
▪️இந்தப் பட்டியலில் இலங்கை 13ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஸ்பெயின், மலேசியா, மாலைதீவு, பாலி, இந்தோனேஷியா, சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு மேலாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
▪️சுற்றுலா பயணிகளுக்கு நட்புரீதியான விருந்தோம்பல் மற்றும் சுவையான உணவு மற்றும் பானங்களை வழங்குவதுடன், கடற்கரையின் அழகு மற்றும் புராதன சிதைவுகள் என்பவற்றை பார்வையிடுவதற்கான வாய்ப்பையும் இலங்கை வழங்குவதாக அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
▪️இதேவேளை, இலங்கைக்கு இந்த மாதத்தின்; முதல் இரண்டு வாரங்களில் 46,000க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
▪️அதன்படி, கடந்த முதலாம் திகதியிலிருந்து 12ஆம் திகதிவரை, மொத்தமாக 46,308 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
▪️இந்நிலையில், கடந்த 12ஆம் திகதிவரை இந்த ஆண்டில் மொத்தமாக 950,626 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதாக அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.
▪️இந்த மாதத்தில் குறைந்தது 120,201 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
▪️அதன்படி, சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பான தமது இலக்கில் 39 சதவீதத்தை இந்த மாத இறுதியில் அடைய முடியுமென இலங்கை சுற்றுலா அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக