▪️அநுராதபுரம் மாவட்ட தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது நேற்று (17) இரவு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

▪️அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, லஹிரு விளையாட்டு மைதானத்தில் இருந்து அநுராதபுரத்தில் உள்ள இல்லத்திற்கு தனது காரில் பயணித்த அவர் காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி வீட்டை நோக்கிச் சென்றபோது, நிறுத்தப்பட்டிருந்த காரின் இடது புற இருக்கையை குறிவைத்து இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

▪️இந்த துப்பாக்கிச் சூட்டில் காரின் பின் பக்க கண்ணாடி சேதமடைந்ததுடன், அவருக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், அவர்கள் கார் ஒன்றில் வந்திருக்கலாம் எனவும், துப்பாக்கிச் சூட்டிற்கு கைத்துப்பாக்கியை பயன்படுத்தியிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

▪️இது தொடர்பான விசாரணைகள் அநுராதபுரம் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம் அநுராதபுரம் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி மேற்பார்வையில், அநுராதபுரம் தலைமையக பொலிஸார், பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட பல குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

▪️இந்நிலையில், பொலிஸ் மாஅதிபரின் உத்தரவுக்கமைய, குறித்த விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.