நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு, எந்தவித உதவி திட்டங்களும் சென்றடையாத அல்லது நிவாரணத்திட்டங்களின் போது பாரபட்சத்தினை எதிர்கொள்கின்ற மக்கள் அது தொடர்பில் புகார் அளிக்கக்கூடிய முறைப்பாட்டிலக்கம் (Hot line) ஒன்றை அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என்று சமூக நீதி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரச நிவாரணங்கள் தற்போது வழங்கப்படுகின்ற நிலையில், சில பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கு அவை முறையாக சென்றடையாத சூழ்நிலை காணப்படுகின்றது.
அதே வேளை நிவாரணங்கள் வழங்கப்படும் போது அரச அதிகாரிகளினால் தமக்கு பாரபட்சங்கள் காட்டப்படுவதாகவும் தொடர்ந்தேர்ச்சியான முறைப்பாடுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு இந்த உதவி திட்டங்கள் முறையாக அவர்களை சென்றடைய வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவும், அதேபோன்று இது தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை அறிய தரவும் அரசு ஒரு முறைப்பாட்டு இலக்கம் அல்லது பொறிமுறை ஒன்றினை உருவாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
06.12.2025.

