கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு அமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி அனைத்து முஸ்லிம் பாடசாலைகளிலும் புனித "மிஃராஜ் தினத்தை" நினைவு கூருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கல்விப் பணிப்பாளர் மேஜர் என்.ரி. நசுமுதீன் அவர்களின் கையொப்பத்துடன் அனைத்து முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கும் விசேட சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புனித ரஜப் மாதத்தின் 27 ஆம் பிறையான ஜனவரி 17 ஆம் திகதி மீராஜ் தினம் வருகின்ற போதிலும், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலின் படி, பாடசாலைகளில் ஜனவரி 21 ஆம் திகதி புதன்கிழமை இத்தினத்தை நினைவு கூருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் அன்றாட கல்வி நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறும், இதில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களையும் பங்குபற்றச் செய்யுமாறும் அதிபர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், தற்போதைய காலப்பகுதியில் டெங்கு நுளம்புகள் பரவாத வண்ணம் பாடசாலைச் சூழலை சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இத்தினத்தில் எமது தாய் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பொருளாதார முன்னேற்றம், சுபீட்சம், ஐக்கியம் மற்றும் சௌபாக்கியம் வேண்டி விசேட பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpg)
