நாட்டின் 71 ஆவது சுதந்திர தின தேசிய வைபவம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் சுதந்திரதின நிகழ்வுகள் கொழும்பு காலிமுகத்திடலில் கோலாகலமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள இந்த சுதந்திரதின வைபவத்தில் பிரதம விருந்தினராக மாலைத்தீவின் புதிய ஜனாதிபதி இப்ரஹிம் மொஹமட் கலந்துகொள்ளவுள்ளார்.
காலிமுகத்திடலில் நடைபெறவுள்ள சுதந்திர தின தேசிய வைபவத்தில் 865 இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக்கலைஞர்களின் பங்குபற்றலுடன் விசேட கலாசார நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், முப்படையினர் மற்றும் பொலிஸாரின் விசேட அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது.
குறித்த அணிவகுப்பானது 3620 இராணுவத்தினர், 1249 கடற்படையினர், 830 விமானப்படையினர், 800 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 505 சிவில் பாதுகாப்புப் உத்தியோகத்தர்கள் மற்றும் 100 தேசிய கடேட் பிரிவைச் சேர்ந்தவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ளதுடன், 25 துப்பாக்கி வேட்டுக்களும் தகர்க்கப்படவுள்ளது.
பிரித்தானிய காலனித்துவத்தின் கீழிருந்து எமது நாடு சுதந்திரமடைந்து 71 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அரச நிறுவனங்கள், வீடுகள், தனியார் அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் 1 - 7ஆம் திகதி வரை தேசியக்கொடியை பறக்கவிடுமாறு அரசாங்க தகவல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(VK)