கோட்டாவுக்கு வாக்களிக்காதவர்கள் துரோகிகளா ?

Rihmy Hakeem
By -
0


கோதபாயாவைத் தவிர்த்து வாக்களித்தவர்களை
ஒருவகை  உளவியல் நெருக்கடிக்குள் தள்ளும் , பிரச்சாரங்கள்  அரசியல் உறுதியுடன் எதிர்கொள்ளப்பட வேண்டியவை!

நவீன மகாவம்ச காலத்திற்குள் இலங்கை அரசியல், மீளத்திரும்பி விட்டது என்று சொன்னால் அதில் எந்த மிகையும் இல்லை, முற்று முழுதான உண்மை அதுதான்.

இதன் பின் விளைவுகளை இட்டு  அரசியல் ரீதியாக யோசிப்பதைத் தவிர நமக்கு முன் வேறு வழிகள்  இல்லை.

இப்போது அதிகாரத்திற்கு வந்துள்ள கோதா- மகிந்த குழுமத்தினை விமர்சிப்பதல்ல இக்குறிப்பின் நோக்கம், அவர்கள்  என்ன செய்யப்போகிறார்கள் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் இவர்கள்  கடந்த காலத்தில் என்ன செய்திருக்கிறார்கள் என்பதும், இவர்கள்  அதிகாரத்திற்கு வந்தவுடன் எதனைச் செய்ய, என்ன மாதிரித் தம்மை உருவகப்படுத்த முற்படுகிறார்கள்  என்பதைப் பார்க்கின்றபோது,  சாதரண மக்களுக்கு அச்சமும், அரசியல் மனிதர்களுக்கு இவர்கள்  மீது நம்பிக்கை கொள்ள முடியாத நிலையும், கூடவே எதிர்ப்புணர்வும் எழுவது தவிர்க்க முடியாது இருக்கிறது.

நடந்த ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் மிகத் தெளிவாக இலங்கையின் இன, சமூக, மக்கள் பிரிவினரின் தேர்வைத் துல்லியமாகக் காட்டுகிறது.
புதிய ஜனாதிபதி  ரூவன்வெலிசாயவில் இருந்து ஆற்றிய உரையில் , ”தமக்குத் தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்கவில்லை” என்கிற  ஆதங்கத்தினை அல்லது கோபத்தினை வெளிப்படுத்தி இருந்தார்.

இலங்கைத் தமிழர்களும் முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் கோதாவுக்கு வாக்களிக்கவில்லை என்பது உண்மைதான்.

ஆகவே அவர்கள்தான்,  ஏன் தமக்குத்  தமிழர்களும் முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் வாக்களிக்கவில்லை ? தம்மை ஆதரிக்காததற்கு உள்ள காரணங்களைத் தேட வேண்டும். அல்லது அதனை நிவர்த்திக்க அரசியல் பணி செய்ய வேண்டுமேயொழிய மக்களை நோக்கி விரல் நீட்டிக் குற்றம் சொல்வதல்ல அரசியல் வழிமுறை.

தமிழர்களும் முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் மட்டுமல்ல, சிங்கள  மக்களும் கணிசமாக கோதாவை ஆதரிக்கவில்லை. 

வாக்களித்த மொத்த வாக்கில் கோதா 52.5 சதவீதத்தினையே பெற்றுள்ளார்.
47.5 சதவீத வாக்காளர்கள் அவரை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதைத் தெளிவாக எதிர்த்துள்ளனர்.

கோதா பெரும்பான்மைச் சிங்கள வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள்ளாரே ஒழிய, இலங்கை  மக்களின் பெரும்பான்மை ஆதரவை அவர் பெற்று ( 70 தொடக்கம் 75 சத வீதத்திற்கு மேல் ) அவர் தெரிவாகவில்லை.
தீர்மான வாக்குச் சக்தி 2.5 வீதமே. இந்த 2.5 சத வீதம் என்பது அங்கிங்கு பொறுக்கி, தமிழர்களும் முஸ்லிம்களும், மலையக தமிழர்களும் அளித்த வாக்கினால் சாத்தியமானது என்கிற முன்வைப்புகளும் உள்ளன. (இதனை இங்கு  பேச எடுத்துள்ள விடயத்திற்குள் கொண்டு வரத் தேவையில்லாத  விடயமாகக் கொள்வோம்)

கோதாவுக்கு ஆதரவு தெரிவிக்காத வாக்காளர்களை முன் நிறுத்திப் பேசுவோமானால்,  தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் தமது இனம், மதம், மொழி, பாரம்பரிய வாழிடம்,  பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறு அச்சங்கள்  இருப்பது ஒருவகை அடையாள அரசியல் சார்ந்தது என்றால், அதனையும் மீறி, இந்தச் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களின் கணிசமான பிரிவினருக்கும், ஜனநாயகம், ஊடக, நீதித்துறைச் சுதந்திரம், குடும்ப ஆட்சி, ஊழல், ஒரு குடும்பமே நாட்ட்டின் வளங்களை, அதிகாரத்தினைத் தமது கட்டுப்பாட்டிற்குள்
வைத்து, கட்டற்ற சுரண்டலுக்கு  வழியமைப்பது, நாட்டின் பன்மைத்துவத்தினைக் கட்டிக் காப்பதில் உள்ள அச்சம் எனப் பல்வேறு காரணங்களை முன்வைத்து, அவர்கள் கோதாவை ஆதரிக்கத் தயங்கி உள்ளார்கள்.

ஆகவே, கோதாவை நிராகரித்ததற்கான காரணம், தமிழர்களும் முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் கருதும் விடயம் மட்டுமல்ல, இதனையும் உள்ளடக்கி, இன்னும் பல அடிப்படை விழுமியங்களை முன் வைத்ததுமாகும்.
ஆகவே கோத்தபாயாவைத் தமிழர்களும் முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும்தான் எதிர்த்தார்கள்  என்கிற உப்புச்சப்பற்ற அரசியல் குற்றச்சாட்டு, உள்நோக்கம் கொண்டதுடன், இன்னொரு வகையில் சொல்வதானால் இம்மக்களை அச்சத்திற்குள்  தள்ளிக் காலில் விழுந்து பணிய வைப்பதற்கான அரசியல் யுக்தியாகவும், தேர்தலுக்குப் பின்னான சூழலில்  மேலேழுந்து வருவதைக் காண முடிகிறது.

இந்த ஆபத்தான, உளவியல் யுத்தத்திலிருந்து கோதபாயவுக்கு வாக்களித்த தமிழர்களும் முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் வெளியே வர வேண்டும். யார் வெல்லுவார் யார் தோற்பார் என்பதை வைத்துக் கொண்டு, மக்களின் ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாடுகள் வருவதில்லை. அப்படியான ஒரு நிலைப்பாட்டினை, தனி மனிதர்களோ, மக்கள்  பிரிவினரோ எடுப்பார்களேயானால் அது சந்தர்ப்பவாத நிலைபாடே தவிர,  உறுதியான அரசியல்  நிலைப்பாடு அல்ல.

இறுதி வரை தாம் எடுத்த எடுத்த அரசியல் நிலைபாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். அந்த நிலப்பாட்டினை எடுப்பதற்கு உந்தித் தள்ளிய அடிப்படைக் காரணிகள்  இலங்கை அரசியல் மட்டத்தில் நிலவும் வரை, அதற்கு எதிராக மக்கள்  நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. இதில் எந்தத் தவறும் இல்லை, கழிவிரக்கம் கொள்ளவோ, தமது முடிவினைப் மீள்பரிசீலனை செய்யவோ எந்த அவசியமும் இல்லை.  மக்களாகிய நீங்கள்  தெளிவாகவும் உறுதியாகவும் முடிவெடுத்துள்ளீர்கள். அந்த  உறுதியுடன் இருங்கள்.

இப்போது இருப்பது ஆட்சியாளர்கள் தம்மை மாற்றிக் கொள்ள வழங்கப்பட்டுள்ள காலமிது...
அவர்கள்  தங்களை மாற்றிக் கொள்கிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

அரசியல் தலைமைகளின் அவசரத்திற்கு வேண்டுமானால் அவர்கள்    தமது பதவிச் சுகத்திற்காக, எந்த மாற்றமும் இல்லாத நவீன மகாவம்ச கால அரச அதிகாரத்திற்கு கீழ் சரணடையட்டும் !
மகிந்த - கோட்டா குழுமத்திற்கு வெட்கம்,  சூடு, சுரணையின்றித் தொண்டு செய்யட்டும் !

0000

ஓர் அரசு - அரசாங்கத் தலைமை என்கிற வகையில் அவர்கள் தமிழர்களும் முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் தம்மை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும், இந்த மக்கள்   சமூகங்களிடமிருந்து அவர்கள்  என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லட்டும். அதனை  ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை  மக்கள்  சொல்வார்கள்.

அதிமேதகு கோட்டாபய அவர்களே! நவீன மகாவம்ச மன்னர் மகிந்தவே, நீங்கள்  வாய் திறந்து சொல்லுங்கள் -  தமிழர்களும் முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும்  மட்டுமல்ல, உங்களை நிராகரித்த  சிங்கள மக்களும் என்ன செய்ய வேண்டும் என்பதை ..!

உங்கள்  பதில் வரும் வரை நாம் எடுத்த முடிவு , உங்கள்  கடந்தகால நடத்தைகளின், அரசியல் தவறுகளின்  விளைவினால்  வந்தவை என்பதில்  நாம் உறுதியாக உள்ளோம்.

Sheikh Fauzer Mahroof

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)