குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உ.பி., மாநிலத்தில் நடந்த கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 263 போலீசார் காயமுற்றுள்ளனர். வன்முறை தொடர்பாக 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் வன்முறைக்கு காரணமானவர்களின் சொத்துகளை முடக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. உ.பி.,யில், மீரட், வாரணாசி, பிரோசாபாத், கான்பூர், பரூக்காபாத், காஜியாபாத், முஜாபர் நகர் உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. போலீசார் மீது, போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கினர். போலீசாரும், தடியடி நடத்தி, அவர்களை கலைத்தனர். சில இடங்களில் வாகனங்களுக்கு, போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
இது தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில், நேற்று முன்தினம் (டிச., 20) வரை, ஆறு பேர் பலியாகி இருந்தனர். இந்த எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், கலவரத்தில் ஈடுபட்டோரை கண்டறிந்து அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். அவற்றை ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் பணம் அரசின் கருவூலத்தில் சேர்க்கப்படும் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், யோகி அறிவித்தபடி, கலவரத்தில் ஈடுபட்டோரின் சொத்துகளை முடக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முசாபர் நகரில், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய 50 பேரின் கடைகளை மூடி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கலவரம் நடந்த மினாக்ஷி சவுக் மற்றும் சச்சி சதாக் பகுதியில் இந்த கடைகள் அமைந்துள்ளன.மாவட்ட எஸ்எஸ்பி அபிஷேக் யாதவ் கூறுகையில், இந்த கடைகள் ஏன் மூடப்பட்டிருந்தன, கலவரக்காரர்கள் இங்கு வந்து கூடியது ஏன் என விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். வன்முறைக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிக்கும் வகையில், இந்த நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கலவரம் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலவரக்காரர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என பிரோசாபாத் போலீஸ் தலைவர் எச்சரித்துள்ளார்.
மாவட்ட கலெக்டர் கூறுகையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து வருகிறோம் எனக்கூறினார்.
கலரவத்தில் ஏற்பட்ட சேதத்தை கணக்கிடும் பணியில் லக்னோ மாவட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.கலவரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை கொண்டு, கலவரக்காரர்களை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளார்.கூடுதல் தலைமை செயலர் அவினாஸ் அவாஸ்தி கூறுகையில், கடந்த 2018 அக்.,1 ல், கலவரத்தில் ஈடுபட்டோரின் சொத்துகளை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டோர் மீது ஐபிசி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.
(தினமலர்)



