கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2000 ஆக உயர்வு - 230 பேரின் நிலைமை கவலைக்கிடம்

Rihmy Hakeem
By -
0
வெளிநாடுகளுக்கான அனைத்துக் குழுக்களின் விஜயங்களையும் நாளை தொடக்கம் இரத்துச் செய்வதற்கு சீன வெளிநாட்டு முகவர் நிலையங்கள் தீர்மானித்துள்ளன.
wuhan virus temperature checkசீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக சீன அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
வூஹான் மாகாணத்தின் அதிகாரிகள் இது தொடர்பில் குறிப்பிடுகையில், இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரில் 230 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீனாவில் இதுவரையில் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,000 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சீனாவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 1300 வரை அதிகரித்துள்ளது.
இன்று முதல் தேவையற்ற வாகனங்கள் நகரத்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது. பொதுமக்களின் போக்குவரத்திற்காக இலவச பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்காக 6 ஆயிரம் வாடகைக் கார்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சீன நாட்டு ஜனாதிபதி இந்த நோய் தொடர்பாக தெரிவிக்கையில், நிலைமை மிக மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
நேற்றிரவு இவ்வாறு குறிப்பிட்ட ஜனாதிபதி, நோய் பரவுவதைத் தடுப்பதற்காக உயர்மட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்நாட்டு அதிகாரிகளுக்கு அறிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
13 நாடுகளில் 43 பேர் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வியட்நாமிலுள்ள சீன நாட்டவர் ஒருவருக்கே வூஹானில் இருந்து வந்த தந்தையின் மூலம் நோய் தொற்றியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு இது தொடர்பாகத் தெரிவிக்கையில், இது மக்களில் இருந்து மக்களுக்குத் தொற்றும் நோய் என்றும் தெரிவித்துள்ளது. இதேவேளை, சீனாவிலுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட அமெரிக்கர்களை தமது நாட்டிற்கு அழைப்பதற்காக அமெரிக்கா தமது விமானங்களை சீனாவுக்கு அனுப்பி வைக்கத் தாயராகியுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)