72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட மத வழிபாடுகள்

Rihmy Hakeem
By -
0
72ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வை பேரபிமானத்தோடு கொண்டாடுவதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. இதற்கமைவாக சமய வழிபாட்டு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் 2 ஆம் திகதி பிரித் பாராயண நிகழ்வு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. தேசிய தினத்திற்கான பௌத்த சமய வழிபாட்டு நிகழ்ச்சிகள் கொள்ளுபிட்டி பொல்வத்த, தர்மகீத்தயராம விஹாரையில் இடம்பெறவுள்ளது. 72ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வை விமர்சையாக கொண்டாடத் தேவையான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பான தேசம், சுபீட்சமான நாடு என்ற தலைப்பில் இம்முறை சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் கொழும்பு 07, சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவிருக்கிறது.
ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோர் இதில் பங்கேற்கவிருக்கிறார்கள். இந்துசமய வழிபாட்டு நிகழ்ச்சிகள் சுதந்திர தினத்தன்று மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.
இஸ்லாமிய சமய நிகழ்ச்சிகள் கொள்ளுபிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலில் இடம்பெறவிருக்கிறது. பம்பலபிட்டி புனித மரியாள் தேவாலயத்தில் கத்தோலிக்க சமய நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. பக்கத்தலே பெஸ்ரிஸ் தேவாலயத்தில் கிறிஸ்தவ சமய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. தேசப்பிதா டி.எஸ் சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் அன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
சுதந்திர தினத்தன்று வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வீடுகளில் மரக்கன்றுகளை நாட்டுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள முன்னோட்ட நிகழ்ச்சிகள் எதிர்வரும் 26ஆம், 31ஆம் திகதிகளிலும், பெப்ரவரி மாதம் முதலாம், 2ஆம், 3ஆம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளன. இதற்கமைவாக, விசேட வாகன ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)