ஒரு தேசியக்கட்சியுடன் கூட்டாக போட்டியிட்டு இன்னுமொரு கட்சியுடன் ஆட்சியமைப்பது சரியா?

Rihmy Hakeem
By -
0
ஒரு தேசியக்கட்சியுடன் கூட்டாக போட்டியிட்டு இன்னுமொரு கட்சியுடன் ஆட்சியமைப்பது சரியா?
=================================
வை எல் எஸ் ஹமீட் 


சிறுபான்மை கட்சிகள் அதிகமான சந்தர்ப்பங்களில் தேசியக்கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றன. அக்கட்சி ஆட்சியமைத்தால் அச்சிறுபான்மைக் கட்சிகளும் அவ்வாட்சியில் பங்கெடுக்கின்றன. அதை யாரும் குறைகாண்பதில்லை.

சிலநேரம் அக்கட்சி குறைவாக ஆசனங்களைப்பெற அடுத்த தேசியக்கட்சி அதிக ஆசனங்களைப் பெற்று ஆட்சிக்கு வருகிறது. இப்பொழுது தாம் போட்டியிட்ட தேசியக்கட்சியை எதிர்க்கட்சியில் விட்டு சில சிறுபான்மைக் கட்சிகள் சிலநேரம் ஆட்சியமைக்கும் அடுத்த கட்சியுடன் இணைந்து அமைச்சுப் பதவிக்களைப் பெறுகிறார்கள். இது பலரது விமர்சனத்தைப் பெறுகிறது. இவர்கள் பதவியாசை பிடித்தவர்கள். பதவிக்காக எதையும் செய்வார்கள்; என விமர்சிக்கப்படுகிறது. இது சரியா?

கூட்டமைப்பு
——————-
கடந்த காலங்களில் கூட்டமைப்புத் தொடர்பாக விரிவான ஆக்கங்களை எழுதியிருக்கிறேன். அதில் கூட்டமைப்பின் வகைகளைக் குறிப்பிட்டிருக்கின்றேன். அதில் ஒன்று- ஒரு குறிப்பிட்ட குறுகிய இலக்கிற்கான கூட்டணி. உதாரணமாக 2015ம் ஆண்டு தேர்தல்முறை மாற்றம் தொடர்பான வரைபு முன்வைக்கப்பட்டபோது 20 இற்கு மேற்பட்ட சிறிய மற்றும் சிறுபான்மைக்கட்சிகள் இணைந்த ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தின. அத்தேர்தல் வரைபு கைவிடப்பட்டதும் அக்கூட்டமைப்பும் செயலிழந்துவிட்டது.

இரண்டு: முஸ்லிம்களின் பொதுவான பிரச்சினைகளில் இணைந்து செயற்படுவதற்காக முஸ்லிம்கட்சிகள் அல்லது சிறுபான்மைகளின் பிரச்சினைகளில் இணைந்து செயற்படுவதற்காக சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து ஏற்படுத்தும் கூட்டணி. மறைந்த தலைவருடைய காலத்தில் தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அமைக்கப்பட்டு அதற்கு அவரையே தலைவராகவும் நியமித்தனர்.

இதுவும் மட்டுப்படுத்தப்பட்ட இலக்குகளுக்காக உருவாக்கப்படுபவை. இவை எதுவும் தேர்தல் கூட்டணி அல்ல.

மூன்றாவது; நீண்டகால கூட்டமைப்பு. உதாரணம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு. இது தேர்தல் உட்பட இணைந்த அரசியல் செயற்பாட்டுக்கான கூட்டமைப்பு.

நான்காவது: தேர்தல் கூட்டமைப்பு- இதுதான் நமது தலைப்பிற்குரியது. இதன் அடிப்படை தேர்தலில் இரு தரப்பும் அதிகூடிய ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளுதல். இதற்காக தேர்தல் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்வார்கள். அதேநேரம் அக்கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் அதற்கு ஆதரவு வழங்குவதற்கு சில சமூகம் சார்ந்த நிபந்தனைகளை முன்வைத்து இன்னுமொரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்வார்கள்.

ஒரு காலத்தில் முஸ்லிம் கட்சிகள் இவ்வாறு இரு ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளும் வழக்கம் இருந்தது. பின்னர் தேர்தல் ஒப்பந்தத்தை மட்டும் செய்துகொள்வார்கள். சமூகம் சார்ந்த ஒப்பந்தம் செய்வதில்லை. ( இங்குதான் இணக்கப்பாட்டு அரசியலில் இருந்து சரணாகதி அரசியலை நோக்கி நமது கட்சிகள் நகர்ந்ததும் சமூகத்தின் எந்தப்பிரச்சினையும் தீர்க்கமுடியாமல் போனதும்- இது வேறு ஒரு தலைப்பின்கீழ் பார்க்கப்படவேண்டும். கடந்தகாலத்தில் இது தொடர்பாக நிறைய எழுதியிருக்கின்றோம்.)

இங்கு இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று தேர்தல் தொடர்பானது. இன்னுமொன்று ஆட்சியமைப்பது தொடர்பானது. அவர்கள் ஆட்சியமைக்கும் பட்சத்தில் நாம் ஆதரவு வழங்குவோம். அதற்குப் பகரமாக சமூகத்தின் இந்த, இந்த பிரச்சினைகளைத் தீர்த்துத்தர வேண்டும்; என்பதுதான் இரண்டாவது ஒப்பந்தம்.

இங்கு கவனிக்க வேண்டியவை
—————————————-
இங்கு கவனிக்க வேண்டிய முதலாவது விடயம்-
“ நீங்கள் ஆட்சியமைக்கும் பட்சத்தில்”- in the event of forming the Government... இந்த சொற்றொடர் அவ்வொப்பந்தத்தில் இருக்கும். இதன்பொருள், அவர்கள் ஆட்சியமைத்தால்தான் நாம் ஆதரவளிக்க உடன்படுகிறோம். அவர்கள் ஆட்சியமைக்காதபோது அவர்களுக்கும் நமக்கும் இடையில் எவ்வித ஒப்பந்தமுமில்லை.

அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தால் நாமும் எதிர்க்கட்சியில் இருப்போம்; என்று எந்த உடன்பாடும் இல்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது.

‘எங்களுடன் இணைந்து போட்டியிட்டு ஆசனங்களைப் பெற்றபின் “ பதவிகளுக்காக” கட்சி மாறுவது நியாயமா? என்று அவர்களில் சிலர் கேட்கிறார்கள். இது அவர்களது மாமூல் அரசியல். ஏற்கனவே பலமுறை நாம் சுட்டிக்காட்டியதுபோல் விகிதாசாரத் தேர்தலில் ஒரு வாக்கு சிலநேரம் இரு ஆசனங்களைத் தீர்மானிக்கும் என்பதனால்தான் அவர்கள் நம்முடன் இணைந்து போட்டியிடுகிறார்கள்.

எனவே, அவர்களும் பயனடைகிறார்கள். நாமும் பயன் அடைகிறோம். தேர்தல் முடிந்ததோடு அந்த ஒப்பந்தம் முடிவடைகிறது. ( ஒழுக்காற்று நடவடிக்கை விடயத்தில் அது தொடர்ந்தும் செயலில் இருக்கிறது என்பது வேறுவிடயம்.) அதனால்தான் ஆட்சி தொடர்பாக இரண்டாவது ஒப்பந்தம் செய்கிறோம் நமது தொடர்பை குறித்த அடிப்படையில் நீடிப்பதற்கு. அங்கும் அவ்வடிப்படை மீறப்படுமானால் ஆட்சியைவிட்டு வெளியே வரலாம்.

அதேநேரம் அவர்கள் ஆட்சியமைக்கவில்லையானால் “ ஆட்சியமைக்கும் பட்சத்தில்” என்ற அந்த ஒப்பந்தமும் செயலிழந்துவிடுகின்றது. எனவே அவர்கள் எதிர்க்கட்சியில் அமரும்போது நாமும் அமரவேண்டும என்ற எந்த கடப்பாடும் இல்லை.

அரசியல் ரீதியாக
———————-
ஒப்பந்தகோணம் ஒரு புறம் இருக்க, இதனை அரசியல்கோணத்திலிருந்து பாருங்கள். ஒரு தனிக்கட்சியின் கொள்கைகள் கட்டியெழுப்பப்படவேண்டிய அடித்தளம் அதன் தனித்துவம், சுதந்திரம் என்பனவாகும்.

நாம் எந்தக்கட்சியில் போட்டியிட்டிருத்தாலும் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டுமா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது நமது சமூகத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டதாகும்.

எப்பொழுதும் ஆளும் கட்சியிலே இருக்கவேண்டும்; எதிர்க்கட்சியில் இருக்கவே கூடாது; என்ற விதி ஏதும் இல்லை. ஆளும் கட்சியின் ஆசனப்பலம்; பலயீனம்; நமது கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளுதல்; ஆளும் கட்சியில் அமர்வதன்மூலம் சமூகத்திற்கு எதையாவது சாதிக்கலாம் அல்லது பாதிப்புகளைத் தடுக்கலாம்; என்கின்ற சாத்தியப்பாடு, இவ்வாறான காரணிகளின் அடிப்படையில்தான் நமது தீர்மானம் அமையவேண்டும்.

அது ஆட்சியில் பங்கெடுப்பதாக இருக்கலாம் அல்லது எதிர்க்கட்சியில் அமர்வதாகவும் இருக்கலாம். அது சமூகம் சார்ந்த முடிவாக இருக்கவேண்டுமே தவிர நாம் போட்டியிட்ட கட்சி எதிர்க்கட்சியில் அமர்கின்றது. எனவே, நாமும் எதிர்க்கட்சியிலேயே அமரவேண்டும்; என்றால் நமக்கு தனிக்கட்சிகள் தேவையில்லை.

துரதிஷ்டவசமாக நமது கட்சிகள் சமகாலத்தில் அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கு சமூகம் காரணமில்லை; அவர்களின் பதவியாசை, சுயநலன்கள்தான் காரணம்; என்பது நிஜமாக இருக்கலாம். அது கட்சிகளுக்கும் சமூகத்திற்கும் இடைப்பட்ட விடயம். அது தொடர்பாகத்தான் நிறையப் பேசிக்கொண்டிருக்கின்றோம். இங்கும் அதற்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால் கோட்பாட்டுரீதியாக நமது முடிவுகள் சுதந்திரமானதாக இருக்கவேண்டும்.

சிலர் தங்களைத் தனிக்கட்சி என்று கூறுகிறார்கள். ஆனால் வென்றாலும் தோற்றாலும் நாம் இந்தத் தலைவரின் தேசியக்கட்சியுடன்தான் இருப்போம். நாம் கொள்கைவாதிகள் என்கின்றனர். இது எவ்வாறு கொள்கையாக முடியும்?

நீங்கள் வென்றாலும் தோற்றாலும் குறித்த தேசியக்கட்சியுடன்தான் இருப்போம்; என்றால் உங்களுக்கு எதற்கு தனிக்கட்சி. நாங்களும் ஒரு கட்சி என்று நீங்கள் சமூகத்தை ஏமாற்றுவதற்கான ஓர் உத்தியில்லையா அது? அவ்வாறாயின் நீங்கள் உங்கள் கட்சிகளைக் கலைத்துவிட்டு அத்தேசியக்கட்சிகளில் இணைந்து அவர்கள் ஆளுங்கட்சியில் இருக்கும்போது ஆளும் கட்சியில் இருங்கள். எதிர்க்கட்சியில் இருக்கும்போது எதிர்க்கட்சியில் இருங்கள்.

எது கொள்கையாக இருக்கமுடியாதோ அதைக் கொள்கையென்றும் எது கொள்கையாக இருக்கவேண்டுமோ அதை எதிர்மறையாக விமர்சிப்பதும் அறிவீனமாகும். மக்களை மடையர்களாக்குவதாகும்.

எனவே,

ஒரு கட்சியின் கொள்கை வகுப்பின் அடிப்படை அதன் தனித்துவமும் சுதந்திரமுமாகும்.

அதன் இலக்கு தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின், சமூகத்தின் நலன்களைப் பேணுவதாகும்.

ஆளும் கட்சியில் இணைவதா? எதிர்க்கட்சியில் அமர்வதா? என்பது அம்மக்களின் நலன் சார்ந்த முடிவாகும்.

தேர்தல்கூட்டு என்பது தேர்தலில் இருதரப்பும் ஆசன விடயத்தில் நன்மையடைவதாகும். தேர்தல்கூட்டு என்பது அக்கட்சிகளை நிரந்தரமாக  பிணைத்துவைக்கும் பிணைப்பு அல்ல.

அவ்வாறு நிரந்தரப் பிணைப்பு என்றால் அதற்கு தனிக்கட்சி தேவையில்லை. அத்தேசியக்கட்சியிலேயே இணையலாம்.

ஒரு தேசியகட்சியில் கூட்டுச்சேர்ந்து போட்டியிட்டுவிட்டு இன்னுமொரு கட்சியின் ஆட்சிக்கு ஆதரவு வழங்குவதில் தவறேதுமில்லை; அம்முடிவு அச்சமூகத்தின் நலனுக்கானதானால்.

இந்த உண்மையை இதுவரை வெளிப்படையாக பேசுகின்ற தைரியம் இருந்தது ஆறுமுகம் தொண்டமானுக்கு மாத்திரம்தான். சில வருடங்களுக்குமுன் இதை அவர் பேசியிருந்தார்.

நமது தலைமைகளில்/ பிரதிநிதித்துவங்களின் பெரும்குறைபாடே தமது நியாயங்களை அடுத்த சமூகத்திற்கு சரியாக எடுத்துச் சொல்லாமல் இருப்பதுதான்.

சரியான கொள்கைகளை இனங்காண்போம். அதனடிப்படையில் செயற்படுவோம். நமது சமூகம் தொடர்பான அடுத்த சமூகங்களின் தவறான புரிதலுக்கு சரியான தெளிவினை வழங்குவோம்.

எந்தக்கட்சியனாலும், எந்தப்பெயரில் இயங்கினாலும் சமூகத்தின் நலனுக்காக மட்டும் செயற்படுவோம்.

போதும், பதவிகளுக்காகவும் சுயநலத்திற்காகவும் செயற்பட்டது.

போதும், சரியைப் பிழையென்றும் பிழையை சரியென்றும் பிரச்சாரம் செய்தது.

போதும் சமூகம் பட்ட துன்பங்கள்.

எதிர்காலம் மிகவும் கவலை நிறைந்ததாக இருக்கின்றது.

தயவுசெய்து இந்த சந்தர்ப்பத்திலாவது, உங்கள் தனிப்பட்ட நலன்களை ஒதுக்கிவைத்துவிட்டு சமூக நலனுக்காக செயற்படுங்கள்.

சமூக நலன் பாதிக்கப்படாத விதத்தில் உங்கள் தனிப்பட்ட நலன்களை அடைந்துகொள்ளுங்கள். ஆட்சேபனை இல்லை.

சிந்தியுங்கள்! செயற்படுங்கள்!!

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)