கொவிட் -19 (கொரோனா) தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தென்கொரியாவில் வசிக்கும் இலங்கையர்களை அறிவுறுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சியோலில் (Seoul)உள்ள இலங்கை தூதரகம் தென் கொரியாவில் தற்பொழுது பரவிவரும் கொவிட்-19 வைரஸ் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
விசேடமாக டெகு(Daegu) நகரில் பரவிவயுரும் இந்த நோய் தொடர்பில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தென்கொரியாவில் தற்பொழுது 20 ஆயிரம் இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றனர். மாணவர்கள் சிலரும் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். டெகு(Daegu) நகரில் சுமார் 915 இலங்கையர்கள் இருப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்பொழுது அங்கு ஏற்பட்டுள்ள நிலமைகளை கருத்தில் கொண்டு அங்குள்ள இலங்கை தூதரகம் 24 மணித்தியாலமும் அவசர தொலைபேசி சேவையை நடைமுறைப்படுத்தி இருப்பதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு: (0082)-2-735-2966, (0082)-2-735-2967, (0082)-2-794-2968
இதற்கு மேலதிகமாக அங்குள்ள இலங்கையர்களுடன் தொடர்புகளை மேற்கொள்வதற்கு 2 சமூக ஊடக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கொரியாவில் உள்ள இலங்கை மத வழிபாட்டு தலங்கள் , ஊழியர் சமூக மற்றும் கல்வி கற்கும் மாணவர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாக வெளிநாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொவிட் -19 தொற்று காரணமாக தென் கொரியாவில் தற்போது 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கொவிட் - 19 தொற்று தொடர்ச்சியாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் தென் கொரிய அரசு விசேட வேலைத்திட்டங்களை செயற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசாங்க தகவல் திணைக்களம்

