( மினுவாங்கொடை நிருபர் )
2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான 19 வயதின் கீழ் இளைஞர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாட, வெற்றிகரமான அணியொன்றை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு நீண்ட காலத் திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், 15 வயதுக்குக் கீழான மேம்படுத்தப்பட்ட இரண்டு அணிகளை, கொழும்பு மற்றும் தம்புள்ள ஆகிய பிரதேசங்களில் நிறுவி செயற்படுத்த இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் ஏற்பாட்டில் நடைபெற்ற 15 வயதுக்குக் கீழான மாவட்ட மற்றும் மாகாண மட்டப் போட்டித் தொடரில் திறமையாக விளையாடிய 54 வீரர்கள் இந்நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இரண்டு கட்டமாக முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில், முதலாவது கட்டம் 35 பேரின் பங்களிப்புடன் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்திலும், இரண்டாவது கட்டம் கண்டி, மாத்தளை, யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த 19 வீரர்களின் பங்களிப்புடன், ரங்கிரி தம்புள்ள சர்வதேச விளையாட்டரங்கில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் நிறுவப்பட்டுள்ள உயர் திறமை மேம்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் மெக்கெஸ்கிலின் வழிகாட்டலின் கீழ் செயல்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித் திட்டத்தைக் கண்காணிக்க, முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரான அநுர தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர்களைத் தவிர, கிரிக்கெட் சபைப் பயிற்சிப் பிரிவில் சேவையிலீடுபட்டுள்ள ரோய் டயஸ், சுமித்ரா வர்ணகுலசூரிய, ரவீந்திர புஷ்பகுமார மற்றும் தம்மிக்க சுதர்சன இங்கு பயிற்சியாளராக ஈடுபடுவார்கள்.
பெற்றோர்களுக்கு அறியத் தந்த பின்னர் அமைக்கப்பட்ட பயிற்சி அணிக்குரிய அனைத்து வீரர்களினதும் தகவல்கள் சேகரிப்பு வீரரின் திறமை மற்றும் பலவீனங்களை ஆராய்ந்து, இலங்கை கிரிக்கெட் புலனாய்வு மையத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
இப்பயிற்சிகளின் படி, தெரிவு செய்யப்படும் 54 வீரர்கள் முதலில் 6 மாத காலப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வூட்டலுக்கு உட்படுத்தப்படுவதோடு, அதற்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள், தங்குமிட வசதிகள் அனைத்தையும் இலங்கை கிரிக்கெட் பெற்றுக் கொடுக்கும்.
( ஐ. ஏ. காதிர் கான் )