புற்றுநோயைத் தடுப்பதற்கு சுகாதார அமைச்சினால் மாத்திரம் தனித்து செயற்பட முடியாது.
புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதற்கு கொள்கை ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பாலித்த கருனாபிரேம தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் இம்முறை நான், நாங்கள், நீங்கள் என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றது. நேற்று (10) சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் இந்த தொனிப்பொருளின் கீழான கலந்துரையாடல் இடம்பெற்றது. உலக நாடுகளில் இடம்பெறும் மரணங்களில் புற்றுநோயால் எற்படும் மரணம் 2 ஆம் இடத்தை வகிக்கின்றது.
இருப்பினும் இந்த மரணங்களில் 3 இல் ஒரு பங்கை தடுக்க முடியும். நாளாந்த வாழ்க்கை கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் புற்றுநோய் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதற்கு முடியும் என்று சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் திருமதி ஜானகி விதான பத்திரண தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாளாந்தம் 64 புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றர். வருடத்தில் 23,530 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இதே போன்று நாளாந்தம் புற்றுநோயினால் 38 பேர் இறக்கின்றனர். வருடத்தில் இந்த நோயினால் இறப்போரின் எண்ணிக்கை 14,013 ஆகும். சர்வதேச ரீதியில் புற்றுநோயினால் நிமிடம் ஒன்றுக்கு இறப்போரின் எண்ணிக்கை 17 ஆகும்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)