உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதானவர்களில் இருவருக்கு பிணை

Rihmy Hakeem
By -
0
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் ஏனைய 59 பேரையும் விளக்கமறியல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை வைக்குமாறு மட்டு. நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் இன்று (25) உத்தரவிட்டார்.


கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று (21.4.2019) இடம்பெற்ற தாக்குதலின் பின்னர், சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 64 கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜயர்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் 3 பேர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து ஏனைய 61 பேர் விளக்கமறியலில் வைக்கப்ட்டுவந்த நிலையில் இன்று (25) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ஒரு பெண் உட்பட 2 பேரை இரண்டு பேர் சரீரப்பிணையிலும் 25,000 ரூபா ரொக்கப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் ஏனைய 59 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பிணையில் விடுதலை செய்யப்பட்ட குறித்த பெண் கடந்த வருடம் ஏப்பிரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருதில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்த சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் முகம்மது நியாஸ் என்பவரின் மனைவி என தெரிவிக்கப்படுகின்றது.

பிணை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், இருவரும் எதிர்வரும் 28 ஆம் திகதி அன்று வழக்குக்காக நீதிமன்றம் ஆஜராகவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் திருகோணமலை, பொலநறுவை, மொணராகலை போன்ற சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் அனைவரும் இராணுவ பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டதுடன் நீதிமன்றத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


-சரவணன்-

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)