பங்களாதேஷுக்கு உலகக்கிண்ணத்தைப் பெற்றுக்கொடுத்த இலங்கையர் - நவீட் நவாஸ்

Rihmy Hakeem
By -
0
பங்களாதேஷ் இளையோர் அணியை தனது கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு, தூரநோக்கு ஆகியவற்றைக் கொண்டு உலக சாம்பியனாக்கியதன் மூலம் ஐ.சி.சி. உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த முதலாவது இலங்கையர் என்ற வரலாற்றுச் சாதனையை நவீத் நவாஸ் ஏற்படுத்தியுள்ளார்.

பதவிகளைப் பெறுவதற்கும் வரலாறு படைப்பதற்கும் யாருக்கும் பின்னால் அலையவோ, தலைசாய்க்கவோ தேவையில்லை என்பதையும் கடும் உழைப்பு, மனஉறுதி, வைராக்கியம், தூர நோக்கு, முறையான திட்டமிடல் என்பனவே வரலாறு படைக்கத் தேவை என்பதையும் நவீத் நவாஸ் முழு உலகுக்கும் எடுத்துக்காட்டியுள்ளார்.

தென் ஆபிரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பலம்வாய்ந்த இந்தியாவை வீழ்த்தி புதிய இளையோர் உலக சம்பியனான பங்களாதேஷ் அணியை வழிநடத்திய பெருமையை நவீத் நவாஸ் தனதாக்கிக்கொண்டார்.

ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த முதலாவது இலங்கை பயிற்றுநர் என்ற பெயரைப் பெற்றது மட்டுமல்லாமல் உலகக் கிண்ண சாம்பியன்கள் பட்டியலில் பங்களாதேஷின் பெயரை பொறிக்கச் செய்த பெருமைக்கும் நவாஸ் உரித்தானார்.

டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான நவீத் நவாஸ், இலங்கைக்காக ஒரு டெஸ்ட் போட்டியிலும் 3 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியிருந்தார். இவ்வருட 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் லீக் சுற்றில் சிம்பாப்வே, ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளை பங்களாதேஷ் வெற்றிகொண்டிருந்தது. பாகிஸ்தானுடனான போட்டி மழையினால் முழுமையாகக் கைவிடப்பட்டது.

சுப்பர் லீக் கால் இறுதியில் தென் ஆபிரிக்காவையும் சுப்பர் லீக் அரை இறுதியில் நியூஸிலாந்தையும் இலகுவாக பங்களாதேஷ் வெற்றிகொண்டிருந்தது. மேலும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வரலாற்றில் இறுதிப் போட்டியில் விளையாடிய முதல் சந்தர்ப்பத்திலேயே பங்களாதேஷ் சாம்பியனானமை விசேட அம்சமாகும்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)