மருதானை ஜும்ஆ பள்ளிவாசல் வரலாறு - பஸ்ஹான் நவாஸ்

Rihmy Hakeem
By -
0


1800ம்  ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு முஸ்லிம்களுக்காக ஜூம்ஆதொழுகையை நிறைவேற்ற சோனகத்தெரு பள்ளிவாசல் மாத்திரமே காணப்பட்டது.

பெரும் வணிகர்கள் ஒன்று கூடிய இடமான கொழும்பு 10 மருதானையில் ஜூம்ஆ பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக இலங்கை வருமாறு கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் " சேக்கடி மரிக்காயர்" ஒரு துாதுக்குழுவினரை தமிழ்நாட்டின் கீழக்கரையை சேர்ந்த "தக்கியா ஸாஹிப் வலி" அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள்.

தனக்கு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் இருப்பதாகவும் அதற்கு பதிலாக தனது மருமகனும் கலீபாவுமாகிய
" இமாமுல் அரூஸ் செய்யித் முஹம்மத் மாப்பிள்ளை லெப்பை ஆலிம்" அவர்களை அனுப்பி வைப்பதாகவும் அறிவித்தார்கள்.

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் பெரும் கடல்சார் வர்த்தகராகவும், முத்து வர்த்தகராகவும், பல்வேறு கப்பல்களுக்கு சொந்தக்காரராகவும் இருந்தார்கள். வர்த்தக ரீதியில் வேலைபளு மிக்கவராக இருந்தாலும் "கீழக்கரை தக்கியா ஸாஹிப் வலி" அவர்களின் வழிகாட்டலுடன் இலங்கை வந்தார்கள்.

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் கைகளால் கி.பி 1840ம் ஆண்டு அதாவது ஹஜ்ரி 1256ல் மருதானை பள்ளிவாசலுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

மருதானை பள்ளிவாசல் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முக்கிய பல பிரகடனங்களை நிறைவேற்றிய இடமாகும்.

 *  துருக்கித் தொப்பி பாதுகாப்பு பிரகடனம்
 * துருக்கி இத்தாலி யுத்த எதிர்ப்பு மாநாடு
 *  உஸ்மானிய ஆதரவு  பிரகடனம்
 * சிலோன் சுதந்திர அரசாங்க ஆதரவு மாநாடு என்பன முக்கியத்துவம் வாய்ந்தவை .

இந்த நிர்மாணப்பணியை மேற்கொண்ட வாபிச்சி மரிக்கார் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் முரீதாவார்.  ஸாஹிராக் கல்லூரி தொடர்பான வழிகாட்டல்களை வழங்கயவர்களும் அவர்களே.

 மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் மகன் ஜல்வத் நாயகத்தின் மகனான செய்ஹ்நாயகம்  அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் பிரதான முரீதுகளில் வாபிச்சி மரிக்கார் அவர்களின் பேரர் "Sir ராசிக் பரீத்" அவர்கள் முக்கியமானவர்கள் ஆவர்.

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் இலங்கையில் 350 பள்ளிவாசல்களையும், தக்கியாக்களையும் (தைக்காக்களையும்) நிர்மாணித்தார்கள்.

 பேராசிரயர் லோர்னா தேவராஜா அவர்கள் தனது புத்தகத்தில் " மாப்பிள்ளை லெப்பை ஆலிம்"  அவர்களின் சேவைகளை சிலாகித்துப் பேசியுள்ளார்கள்.
 
மருதானை ஜும்ஆ பள்ளிவாசலை அபிவருத்தி செய்யும் பணி 1991ஜூன் 06ம் திகதி இடம்பெற்றது. இதனை இமாமுல் அரூஸ் செய்யித் முஹம்மத் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் பேரர்  கண்ணியத்திற்குரிய "அப்ழலுல் உலமா கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம்" அவர்கள் ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

பஸ்ஹான் நவாஸ்
செய்தியாசிரியர்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)